Friday, 28 October 2011

செய்யாத தவறுக்கு தண்டனை

 செய்யாத தவறுக்கு தண்டனை 
வீட்டில் அப்போதெல்லாம் வறுமை கொடுமையாக தாண்டவம் ஆடும் .ஒரு பைசாவுக்கு கூட அப்போது மதிப்பு உண்டு ,ஒரு பைசாவுக்கு மணிலா கேக் தருவார்கள் ,ஆனால் ஒரு பைசா தரத்தான் ஆள் இருக்காது .அம்மா வைத்திருக்கும் காசுகளை அவ்வப்போது தெரியாமல் எடுத்துகொண்டு கேக் வாங்கி சாப்பிடுவது வழக்கம் ,அதிகபட்சம் இரண்டு பைசா எடுப்பேன் அவ்வளவுதான் .அதற்க்கு மேல் அப்போது எனக்கு செலவழிக்க கூட தெரியாது ,

இந்த நிலையில் ,அம்மாவுக்கு அவ்வப்போது தெரிந்து அடிவாங்குவதும் சகஜம் ஆகிப்போனது .
ஒருநாள் கடைக்கு சமான் வாங்க சொல்லி காசு கொடுத்தார்கள் ,சமான் வாங்கிகொண்டு மீதம் அவன் 25 பைசா மீதி கொடுத்தான் ,அதை வாங்கி மேல் சட்டைப்பையில் போட்டுகொண்டு வீட்டுக்கு வந்தேன் .சாமானை கொடுத்து விட்டு மீதி காசுவை பையில் பார்த்தால் காசை காணவில்லை ,பை ஓட்டையாக இருந்தததால் விழுந்து விட்டிருக்கிறது ,அம்மாவிடம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை ,நான் அவ்வளவுக்கும் வாங்கி தின்றுவிட்டேன் என்று உறுதியாக நினைத்து விட்டார்கள் ,அப்பா வேறு விசாரிக்கிறார் ,நான் மீண்டும் மீண்டும் கிழே விழுந்து விட்டது என்று எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை .அப்பாவும் அம்மாவும் என்னை செம அடி அடிக்கிறார்கள் ,அவர்கள் கஷ்ட்டம் அவர்களுக்கு ,எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை .

அடி கண் மண் தெரியாமல் விழுகிறது ,நான் பலமாக வாந்தி எடுத்து ,மயங்கி விழுந்து விட்டேன் ,அவ்வளவு பலமான அடி .
உடனே அப்பாவும் அம்மாவும் என்னை தூக்கி கொண்டு மருத்துவ மனைக்கு சென்று ,நிறைய செலவு செய்ய வேண்டியதாகி விட்டது ,வரும் வழிஎல்லாம் வேறு திட்டிக்கொண்டே வருகிறார்கள் .
என்னை மருந்து கொடுத்து படுக்க வைத்து விட்டு ,அம்மா வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைக்கிறார்கள்
நான் சட்டையில் போட்ட காசு ஓட்டை வழியாக கிழே விழாமல் நான் சாமான் வாங்கிய பையில் விழுந்த்திருந்த்தது ,இன்று வரை என் அம்மா அந்த செயலை சொல்லி சொல்லி வருத்தப்படுவார்கள் !!

மிகவும் எனக்கு ஆச்சிரியத்தையும் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதும் ஒன்றாக என் வாழ்வில் அமைந்து விட்டது

வறுமை

வறுமை

என் சிறுவயதில் நான் அனுபவித்த வறுமையை யாருமே அனுபவிக்க கூடாது என்று என் மனதுக்குள் இன்றும் அழுகின்றேன் ஐயா !!
என் தந்தையர் கலப்புமணம் செய்துகொண்டவர் !அதை விட என் தாத்தா பாட்டியின் கதை வேறுவிதமாக இருக்கும் !அது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கின்றேன் !!
என் பாட்டி தன் கணவரை பிரிந்து என் அப்பாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார்கள் !!
என் அப்பா வேறு சாதியை சேர்ந்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள் ,ஆகையால் குடும்ப வழிகளில் பெரிய ஆதரவுக்கு யாரும் இல்லை .
அண்ணாமலை பல்கலைகழகத்தில் உணவு பரிமாறுபவராக இருந்தார்கள் ,மிக மிக குறைவான சம்பளம் தான் தருவார்கள் ,அதை வைத்து இருவர் கூட மூன்று வேளை சாப்பிட முடியாது ,அவ்வளவு வறுமை ,ஆனால் நாங்கள் தம்பி மூன்று பேர் தங்கை ஐந்து பேர் பாட்டி ,அம்மா மொத்தம் 11 பேர் சாப்பிட வேண்டும் .நிலைமையை யோசித்து பாருங்கள் ஆனால் வாழ்ந்தோம் ,அது தான் வாழ்க்கை ................................ 
எங்கள் வாழ்க்கை எப்படி ஓடியது என்றால் ,பல்கலை கழக விடுதியில் வேலை பார்த்த என் தந்தையார் அங்கே மாணவர்கள் சாப்பிட்டது போக மீந்து இருக்கும் சாப்பாட்டை எடுத்து வருவார்கள் !அதுவும் சட்டப்படி எடுத்துபோக கூடாது ,விடுதிக்கு பின்புறம் மேயும் பன்றிகளுக்கு தான் கொட்ட வேண்டுமாம் !அதை தெரியாமல் வயிற்றில் கட்டி எடுத்து வருவார்கள் அதுதான் எங்களுக்கு சாப்பாடே !நாங்கள் எல்லோரும் பள்ளிக்கு கட்டாயம் போகவேண்டும் இந்த கஷ்டத்தில் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கின்றிர்களா!!அது தான் தாயை தெய்வம் என்று சொல்கிறோமே அந்த தெய்வத்தின் பிடிவாதம் !எங்கள் தெருவிலேயே நான் தான் முதல் பட்டதாரி என்றால் எங்கள் தெய்வத்தின் செயல் பாட்டை நினைத்து பாருங்கள் !!இரவு அப்பா எடுத்து வரும் [வேலை முடிந்து 11 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார் ,சில நாட்கள் 12 மணிக்கு மேல் கூட ஆகிவிடும் .]சாப்பாடு மறுநாள் காலையில் சாப்பிடுவோம் ,சாப்பிட்டு பள்ளிக்கு சென்றால் மதியம் சாப்பாட்டுக்கு 3 கிலோமீட்டருக்கு மேல் நடந்து வந்து தான் சாப்பிட வேண்டும் ,நடந்து அல்ல ஒரு மணிக்கு பள்ளி விட்டால் ஓடிவருவோம் !சாப்பிட்டு விட்டு மீண்டும் ஓடுவோம் அப்போது தான் பள்ளிக்கு இரண்டுமணிக்கு செல்லமுடியும் ,இடையில் நாவல் பழம் பறிக்க முடியும் .

தினமும் இப்படி தான் வாழ்க்கை போகும் !அப்பா வெறும் சாப்பாடு ,தோசை ,இட்லி ,பூரி இப்படி வகை வகையாக எடுத்து வருவார் ஆனால் எனக்கு தெரிந்து அவைகளுக்கு தொட்டுக்க வைத்து நான் சாப்பிட்டது மிகமிக குறைவு !!வறுமை அப்படி !!வெறும் சோறை தண்ணிர் விட்டு வெங்காயம் தொட்டு தான் சாப்பிடுவோம் !!
இதை விட கொடுமை அப்பாவிடம் இருந்த ஒரு மோசமான கெட்ட பழக்கம் சூதாட்டம் !!!
சம்பளம் வாங்கி கொண்டு சூதாட கிளம்பி விடுவார் அப்போது எங்களுக்கு சாப்பாடு ............................................................................ கொடுமை சார் அது !!
கண்ணீர் வந்ததால் மன்னித்து கொள்ளுங்கள் .............. 

அம்மாவுக்கு இந்த வறுமையை ஓட்ட கண்டுபிடித்த வழிதான் இட்லி சுட்டு விக்கிறது ,ஆடு மாடுகள் வளர்ப்பது ,படித்துக்கொண்டே இந்த வேலைகளுக்கு உதவி செய்வது இருக்கிறதே !!மிக கொடுமை அது !!காலையில் எழுந்த்தவுடன் அம்மா பாலை கறப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாக கொடுக்க வேண்டும் ,அவைகளுக்கு கழனிநீர் வைக்க வீடு வீடாக சென்று எடுத்து வரவேண்டும் அதற்க்கு ஈடாக சாணத்தை அவர்கள் வீட்டுக்கு கொண்டு கொடுக்க வேண்டும் ,வீட்டில் மீந்து இருக்கும் சாணத்தையும் இன்னும் பல்வேறு இடங்களில் இருந்து பொருக்கி வரும் சானங்களையும் வரட்டி தட்ட அம்மாவுக்கு உதவி புரிய வேண்டும் ,
காலையில் அவிழ்த்து விடும் மாடுகள் மாலையில் தானாக விட்டுக்கு வந்து விடும் .
சில நேரம் அந்த மாடுகள் வீடு வாராமல் காணாமல் போகிவிடும் ,அப்போது வீடு படுகின்றபாடு சொல்லி மாளாது !!......................ஆனால் அதையும் சொல்கின்றேன் !!
காணமல் போன மாட்டை கண்டு பிடிக்க வீட்டில் உள்ள எல்லோரையும் ,வீட்டை விட்டு விரட்டிவிடுவார் அம்மா !!
அந்த மாடு எவர் வீட்டு வயலிலாவது மேய்ந்து இருக்கும் வயல் சொந்தக்காரர் மாட்டை பிடித்து கொண்டுபோய் எதாவது ஒருகிராமத்தில் வீட்டு தோட்டத்தில் கட்டி போட்டு இருப்பார் அதை கண்டு பிடிப்பது சிபிஐ வேலையை விட கடினமானது ,பல நேரம் கண்டுபிடித்து விடுவோம் ,சிலநேரம் கண்டுபிடிக்க முடியாது ,அப்போதெல்லாம் அம்மாவின் அழுகை என் கண்ணில் இன்றும் நிழலாடுகிறது !!
இந்த வருமானம் ஒட்டு மொத்தமாக அதில் போகிவிடும் ,பல வருட உழைப்பு சிலமணி நேரத்தில் அழிந்து விடும் .இருந்தததோ ஒரு சிறு ஓலை குடிசை வீடு ,அதை கூட பலவருடங்கள் ஓலை கூட மாற்ற முடியாது ,மழைக்காலங்கள் வந்தால் நாங்கள் படுகின்ற கொடுமை சொல்லி மாளாது !!
ஆம் !தோழர் பெய்கின்ற மழை எல்லாம் எங்கள் வீட்டின் உள்ளே தான் பேயும் வீட்டின் உள்ளே வாய்க்கால் வெட்டி தண்ணிரை வெளியேற்றுவோம் மீதி இருக்கும் இடத்தில் எங்கள் தங்கைகளை படுக்க வைத்திருப்போம் ,தம்பிகளை பக்கத்து வீடுகளுக்கு அனுப்பிவிடுவோம் !!எனக்கு வினவு தெரியும் வரை இதுதான் ஐயா!!நடந்தது,
என் மனதில் அப்போது ஓடியதுஎல்லாம் ஒழுகாத வீட்டில் குடி இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை .
அந்த மழை காலங்களில் தங்கைகளை தூங்க வைத்துவிட்டு நானும் என் அம்மாவும் இரவு முழுதும் அழுத அழுகை என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது !!
அதனால் தான் குடிசை வீடுகள் அனைத்தும் ஒட்டு வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் ,நானும் ஒரு ஒழுகாத வீடு கட்டினேன் ...........................
ஆடையே இல்லாத கணவனைபோலும் ,கூறைகுடிலில் வாழும் மனைவிபோலும் தான் எங்கள் வாழ்க்கையும் ,தீபாவளி வந்துவிட்டால் ,அம்மா படும் வேதனை சொல்லி மாளாது ஐயா!!
நாங்கள் தீபாவளிக்கு மட்டும் தான் புது துணியை பார்க்க முடியும் ,அதுவும் இருப்பதிலேயே மிக குறைந்த்த விலை துணிதான் எடுப்பார்கள் ,அதுவும் அப்பாவுக்கு அலுவலகத்தில் கூட்டுறவு துணிக்கடையில் கடன் கொடுப்பார்கள் அந்த துணிதான் ,வெடி எல்லாம் மற்றவர்கள் வெடித்து போட்ட மீதி தான் .
சில நேரம் அப்பாவுக்கு எதாவது பணம் மாணவர்களிடம் வசூலித்து தருவார்கள் ,அப்பா அதை எடுத்துக்கொண்டு சூதாட கிளம்பிவிடுவார்கள் ,அவரை தேடி நானும் அம்மாவும் ஒவ்வொரு கிளப்பாக தேடி அலைவோம் ,கிடைக்க மாட்டார்கள் ,கிடைத்தாலும் சூதாட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு ஜெஜ்ஜிக்கிட்டு வரேன் போங்க என்று விரட்டுவார் ,அம்மா அழுதுகொண்டே வருவார் ,பலநேரம் அவர் தாலி தான் எங்களுக்கு தீபாவளி கொண்ட்டாடும்.
அவ்வளவு கொடுமைகள் அனுபவித்தாலும் ,அந்த பாசம் எங்களை கட்டிபோட்டு விடும் ஐயா !!
அப்பா பல நேரம் என்னிடம் அழுவார் இந்த பாழாய்ப்போன பழக்கம் என்னை விடாமல் குடும்பத்தை அழிக்கிறதே என்று அழுவார் .
இதை விட கொடுமை ஒன்னு இருக்கு ,வருடத்தில் இரண்டுமாதம் கல்லூரி மூடிவிடுவார்கள் ,அப்போது அப்பா சாப்பாடு எடுத்து வரமுடியாது ,அப்போது எல்லாம் பலநேரம் நாங்கள் பட்டிநிகிடந்த்தே பழகிவிட்டோம் ,எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு அரவை மில் இருக்கும் ,அப்போது எங்களுக்கு விடுமுறையில் நான் அந்த மில்லுக்கு வேலைக்கு போவேன் ,கூலி என்ன தெரியுமா ?
அரைத்து மீந்துபோன குருணை தான் ஐயா !!இப்போதெல்லாம் ரேசன் அரிசியை கூட மக்கள் பலர் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் ,அந்த குருணையை கோழிக்கு வைத்தால் கூட சாப்பிடாது ஐயா !அவ்வளவு கல் இருக்கும் அதை வாங்கிகொண்டு வந்தது சுத்தப்படுத்தி கஞ்சி தான் காச்சி குடிப்போம்.
அந்த குருணையை வாங்க செய்ய வேண்டிய வேலை இருக்கிறதே !!ஐயோ !!.......................................... 

காலை 8 மணிக்கு எல்லாம் அந்த மில்லில் இருக்க வேண்டும் அதுவும் எல்லோருக்கும் வேலை இருக்காது குறிப்பிட்ட சிலரைத்தான் தேர்வு செய்வார்கள் ,அதில் நாமும் ஒருவராக இருந்தால் நமக்கு அதிஷ்டமே!!

அப்படி உள்ளே போனால் 500 முட்டைகளுக்கு மேல் நெல்லை வெவித்து முட்டு முட்டாக கொட்டி வைத்திருப்பார்கள் ,அவைகளை முறத்தால் பரப்பி .பல்பலகை போட்டு ,காலால் கிண்டி ,பிறகு முறத்தால் கிளறி அடிக்கிற வெயில் அனைத்தும் நாள் முழுவதும் நம்மேல் தான் ,அவைகளை காயவைத்து ,மூட்டையில் அள்ளி அரவை பெட்டியில் கொட்டி ,மறுநாள் வெவியலுக்கு பதரை அள்ளி கொட்டி விட்டு அவைகளின் கறிகளை சுத்தப்படுத்தி ,கூலியை வாங்க இரவு 10 மணியாகி விடும் ,நாங்கள் சின்ன பையன் என்பதால் 2 படி குருணை மட்டும் தான் ,பெரியவர்களுக்கு 2 ரூபாய் கூலி சேர்த்து கொடுப்பார்கள் .அதை வைத்து தான் எங்கள் கிராமமே வாழ்ந்து வந்தது .

பலநாட்கள் நமக்கு இந்த கூலி தரமாட்டேன் என்கிறார்களே !என்கிற வருத்தம் என்னுள்ளே இருந்து கொண்டே இருந்த்தது முதலாளியிடம் ஒருநாள் ,பெரியவர்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் நானும் தானே செய்கின்றேன் எனக்கு மட்டும் கூலியை ஏன் குறைத்து கொடுக்கிறிர்கள் என்று கேட்டு விட்டேன் ,பலன் ................................
நெல்லை கொண்டு தொட்டியில் கொட்டுகிறோம் இல்லையா அதை இரவு முழுவதும் அரைத்து அரிசியாக்கி விடுவார்கள் !!தொட்டியில் கொட்டிய நெல்லை இருவர் இரவு முழுவதும் தள்ளி கொண்டே இருக்க வேண்டும் ,அப்போது தான் அரைக்கும் .அவர்களுக்கு மட்டும் குடுதலாக ஒரு ரூபாயை கொடுப்பார்கள் .
அந்த வேலை மிக மிக கொடுமையானது ,இரவு முழுவதும் நெல்லை தள்ளுவதால் அந்த நெல்லு சொனை உடம்பு பூறா பரவி நிறந்தர அரிப்பையும் ,சொறியையும் ,மூக்கு வழியாக ஏறி நிறந்ததர ஆஸ்துமாவையும் பரிசாக அளிக்கும் ,அதனால் யாரும் அந்த வேலைக்கு போகமாட்டார்கள் .

எனக்கு அந்த வேலையை கொடுத்து ,இருவருக்கு பதில் என்னைமட்டும் நியமித்து ,மற்றவர்களுக்கு மூன்று ரூபாய் கொடுத்ததற்கு பதில் எனக்கு ஒரு ரூபாய் அளித்து வேலையை வாங்கி கொண்டார்கள்

எங்கள் குடும்ப சூழ்நிலை ஒரு ரூபாய் கூடுதலாக. கிடைக்கிறதே என்று தினமும் படாத பாடுபட்டேன் .அந்த கொடுமையை வீட்டில் சொல்லி பலநாள் புலம்பினேன் ,அம்மா வந்து மில் முதலாளியிடம் கேட்டபோது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்து தருகிறோம் அந்த வேலையை செய்ய சொல்லுங்கள் இல்லை என்றால் அவரை வேலையில் இருந்தது நின்றுகொள்ள சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள் .அம்மா என்னிடம் வந்து பொறுத்துக்கொண்டு செய்யுப்பா!! என்ன செய்யுறது !!என சொல்லிவிட்டார்கள் ,பிறகு என் கஸ்ட்டம் என்னோடு என்று அந்த வேலையை தொடர்ந்தேன் .விளைவு ........................................................... 

பள்ளியில் ஆரம்பித்த அந்த வேலை கல்லூரி படிக்கும் வரை தொடர்ந்ததது ,குடும்ப வறுமையும் ஒழிந்த பாடில்லை ,இதில் என் படிப்பு செலவுக்கு ,தம்பி தங்கைகளின் படிப்பு செலவுக்கு என்று அம்மா 10 பைசா வட்டிக்கு பணம் வாங்கி கடன் வேறு சேர்ந்து கொண்டது .அந்த வறுமையை வறுமை அடைய வழி தெரியாமல் தவித்து போய்விட்டோம் .
விடுமுறை நாள் என்றால் தான் மில்லுக்கு வேலைக்கு போக முடியும் ,மற்ற நாட்களில் போக முடியாது ,என்ன செய்வது என்று யோசித்தேன் ,எனக்கு கணக்கு பாடம் அருமையாக வரும் ,கல்லூரிக்கு போகும் போதே காலை மாலை நேரங்களில் சில டுடோரியல் கல்லூரிகளுக்கு சென்று பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன் ,அவர்களும் உழைப்பை சுரண்டினார்களே தவிர உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரவில்லை .
பார்த்தேன் ,நானே "அன்பு கணித பயிலகம் " தொடங்கினேன் .ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு 20 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்தேன் ஆரம்பத்தில் குறைந்த மாணவர்களே வந்தார்கள் .விளம்பரபடுத்தினேன் மாணவர்கள் குவிந்தார்கள் ,சேர்ந்த அத்தனை பேரையும் தேர்ச்சி அடையவைத்தேன் ,அதற்க்கு பல வித்தியாசமான வழிகளை கடைபிடித்தேன் .
வறுமை மெல்ல அகல ஆரம்பித்தது ,முதலில் என் வருமானத்தை கொண்டு ஒழுகி கொண்டிருந்தத வீட்டை கீற்று ,கழி என அனைத்தும் புதிதாக வாங்கி கட்டி முடித்து அந்த வீட்டில் உட்கார்ந்த மகிழ்ச்சி ,நான் தற்போது கட்டிருக்கும் மாடி வீட்டில் குடியேறிய போது கூட எனக்கு கிடைக்கவில்லை .






 

மரணத்திற்கு பின் .................

அனைத்து ஆன்மிக கருத்துக்களும் ,மதங்களும் மனிதனின் மரண பயத்தை தன் பலமாக எடுத்துக்கொண்டு பல்வேறு மூட நம்பிக்கைகளை பரப்புகின்றன .எல்லா மதங்களும் கிட்ட தட்ட சுவர்க்கம் ,நரகம் ,மறுபிறவி என்று உண்மையில்லாத விவரங்களை கூறிமக்களை நெறிபடுத்த முயல்கின்றன அல்லது மதத்தின் மூட நம்பிக்கைகளை நம்பவைக்க பயன்படுத்துகின்றன .
இல்லாத ஒன்றை அல்லது உணரவே முடியாத ஒன்றை இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவது மிக பெரிய மோசடி குற்றமாகும் . மதங்கள் வலியுறுத்துகின்ற ஜீவாத்மா ,பரமாத்மா என்ற கருத்துக்களும் விவாதத்திற்கு உரியவை . ஒன்றும் இல்லாததிலிருந்த்துதான் அனைத்தும் உருவாயிற்று இந்த ஒன்றும் இல்லாததுதான் பரமாத்மா என்றும் மதங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இவைகள் அறிவியல் பூர்வ கருத்துக்களோடும் இயல்பு நிலையிலும் ஏற்றுக்கொள்ள கூடிய பொருள்கள் .ஆனால் மனிதனின் மரணத்திற்கு பின் ஆன்மா என்ற ஓன்று வெளியேறி ,தான் பெற்ற பாவ, புண்ணிய காரணங்களுக்கு ஏற்ப பரமாத்மா ,சொர்க்கம் ,நரகம் ஆவி ,மறுபிறவி அடைகின்றன என்பது ஏற்க முடியாத கருத்துக்கள் .
அதாவது மதங்களின் கோட்பாட்டுப்படி இருக்கின்ற ஆன்மாக்கள் தான் மீண்டும் பிறக்கின்றன என்று ஏற்றுக்கொண்டால் முப்பது கோடி மக்கள் தொகையாக இருந்த இந்தியாவில் 125 கோடியாக மக்கள் தொகை பல்கி பெறுக எது காரணம் ?ஆன்மாக்கள் இரண்டாக பிரியும் தன்மை வாய்ந்ததா ?இன்னும் சொல்லபோனால் ஒரு மனிதனிடம் இருந்து ஒரு முறை வெளியேறும் ஆரோக்கியமான விந்திலிருந்த்து பல லட்சம் குழந்தைகளை உருவாக்க முடியும் ..அறிவியல் தகுந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் இந்த பல லட்சம் குழந்தைகளையும் உருவாக்க முடியும் .இதை உலகம் முழுவதும் நடைமுறை படுத்தினால் நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது .பல கோடி கோடி மக்களை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ள முடியும் இன்னும் உயிரியல் படிப்பின்படி செல்கள் இருந்தாலே குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியும் .
அதே போல் இன்றைய உலகில் மனிதன் நினைத்தால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் .வேண்டாம் என்றால் தவிர்க்க முடியும் .அப்போது பிறப்பு என்பதற்கும் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்புள்ளது என்று கூறுகிற ஆன்மீக கருத்துக்கள் தவறானவை ஆகும் .இன்னும் சில மதவாதிகள் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் ஏன் நல்ல குழந்தைகளாக பிறப்பதில்லை .கூன்,குருடாக பிறக்கின்றன ,இதற்க்கெல்லாம் இறைவன் தான் காரணம் என்கிறார்கள் .
கர்பமான தாய் கர்ப்பமான முதல் முன்று மாதங்கள் தலைவலி மாத்திரை உண்டாலும் ,கர்ப்பத்தடை மாத்திரை உண்டாலும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி குறையுடன் தான் பிறப்பார்கள் .இதில் கடவுளாக தாய்யல்லவா காட்சி தருகிறாள் .எனவே இதிலும் கடவுள் எங்கே வந்தார் .எனவே இயல்பாக எதிபாராமல் நடக்கின்ற நிகழ்சிகளுக்கு எல்லாம் கடவுள் காரணம் என்று கூறுவது அறிவுக்கு ஏற்றதன்று .
ஆனாலும் மரணத்தை பற்றிய தெளிவு நம்மில் பலருக்கு இருப்பதில்லை ,மரணத்தை துணிவோடு ஏற்றுகொள்கின்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் ,இறைவன் பற்றிய அறிவுக்கு ஏற்பில்லாத கருத்துக்களை கூறும்போது கேள்வி கேட்க மனம் துணியும் ,தெளியும் .ஆனால் நாம் மரண பயத்தை மனதிலே சுமந்து கொண்டு சாகாத பிணமாக வலம் வருவதால் அறிவுப்பூர்வமான கருத்துக்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை .2000 ஆண்டுகளுக்கு முன்பே நமது பாட்டன் திருவள்ளுவன் எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்தித்திருக்கின்றான் பாருங்கள் , "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு !"
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு "
நாம் தூங்கும் போது நாம் உயிரோடு இருக்கின்றோம் நம் நினைவுகள் ,ஆன்மா என கூறப்படுவன அனைத்தும் இருப்பதில்லை .நமது மூளை முற்றிலும் செயல் இழந்துவிடுகிறது ஆனால் தற்காலிகமானது .அதாவது மூளை தற்காலிகமாக செயல் இழந்துவிட்டால் அல்லது செயலை நிறுத்தி விட்டால் நாம் எந்த நினைவுகளும் இல்லாத மரண நிலையை அடைந்து விடுகின்றோம் .ஆனால் மரணம் என்று ஓன்று நிகழ்ந்து விட்டால் மூளை முற்றிலும் நிரந்தரமாக செயல் இழந்து விடுகிறது . எனவே "மூளை முற்றிலும் செயல் இழந்துவிட்டால் மரணம் ,தற்காலிகமாக செயல் இழந்தால் தூக்கம் " ,இதில் இறைவனுக்கோ ஆன்மாவிர்க்கோ, பரமாத்மாவிர்க்கோ தொடர்பு இல்லை என்பதை உணர்ந்து தெளிவு பெறுவோமாக !! .
எனவே மரண பயத்தை தவிர்த்து வாழும் போது வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக நாமே ஆகுவோம் அதை தான் வள்ளுவன்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் _வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ."
என்று கூறுகிறார் .

Wednesday, 19 October 2011

நீதி தலை கவிழ்ந்து சாகிறது

நீதி தலை கவிழ்ந்து சாகிறது

போலீஸ் விரட்டுகிறது ,காட்சின சாராயத்தை சுடுகாட்டில் போட்டு விட்டு ஓடுகிறது ஒரு கூட்டம்.போலீஸ் விரட்டி விரட்டி பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே ஒருவருடம் தள்ளுகிறது .ஜாமீனில் வெளியே வருகிறான் சாராய மன்னன் மீண்டும் காட்ச்சுகிறான் ,அவனுக்கு துணையாக ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்க தலைவர் .....டையார் ஆதரவாக இருக்கிறார் .அடியாட்களும் ரவுடிகளும் பக்க பலத்துடன் வலம் வருகிறான் .நல்லவர்கள் ஒதுங்குகிறார்கள் ,ரவடி குடித்து விட்டு ஒரு கடையில் வயிறு முட்ட தின்கிறான் ,காசு கேட்ட கடைக்காரனை அங்கேயே வெட்டி சாய்க்கிறான் , சாதி சங்க தலைவரின் ஆதரவுடன் வேறு ஒருவரை போலீசில் ஆஜர் ஆக்கி விட்டு ,ராஜ்ஜியத்தை தொடர்கின்றான் .
பிரச்சாரம் களை கட்டுகிறது ,கலியனுக்கு வாக்கு அளியுங்கள் ,உங்கள் ஜாதி தலைவரின் ஆதரவு பெற்ற கலியனுக்கு வாக்களியுங்கள் !!
உங்கள் ஊரில் இரவுபள்ளியும் ,குளத்தை தூர் எடுத்ததும் ,குடிநீரும் ,சிமெண்ட் சாலைகள் அமைத்துகொடுத்ததுமான விழிப்புணர்வு இயக்க வேட்பாளர் அருளுக்கு வாக்களியுங்கள் !தனி மனித ஒழுக்க வேட்பாளருக்கு வாக்களியுங்கள் !! நல்லவர்களின் குரல் ஒருபுறம் !!
கலியனுக்கு ஆதரவாக சாராயமும் ,ஓட்டுக்கு பணமும் ,ஜாதி ஆதரவாளர்களும் மறுபுறம் !!
முடிவு அறிவிக்க படுகிறது ,கலியன் 30 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெறுகிறான் ,வார்டுக்கு ஜெயித்த மற்ற உறுப்பினர்களை கடத்தி பணம் கொடுத்து பேரூராட்சி தலைவர் ஆகிறான் .
நீதி தலை கவிழ்ந்து சாகிறது .
ஜாதி தலைவன் ஒரு கொலை வழக்கில் மாட்டி செல்வாக்கு இழக்கிறான் ,ஜெயித்த அவன் ஜாதி கலியன் அதிமுக வில் தஞ்சம் அடைகிறான் .
மீண்டும் தேர்தல் ஜாதி தலைவர் ஒரு வார்டுக்கு ஒட்டு கேட்டு வீடு வீடாக வருகிறார் ,அவரை எதிர்த்து அதே கலியன் ,
ஆனால் இந்த தேர்தலில் காணபோனது விழிப்புணர்வு இயக்கம் !!
அதே சாராயம் ,அதே பணம் ஆனால் மக்கள் மனதில் ஊறி இருக்கும் ஜாதி உணர்வு சற்று வேறுபக்கம் திரும்புவது போல் தெரிகிறது !!
தேர்த்தல் முடிவு வரும்போது தான் தெரியும் !!ஜாதியா !!ரவ்டியா !!என்று
ஆனால் தோற்றது விழிப்புணர்வு இல்லை மக்கள் தான் !!

அது சரி அந்த சாராய வியாபாரி என்ன ஆனான் !!அதானே உங்கள் கேள்வி!!
அதான் கதையில் கலியனாக இருக்கிறானே !!இருவரும் ஒருவர் தான் !!

மணிக்கட்டு முறிந்து விட்டது

அதே பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் போதுஇதே நண்பர் ராமமூர்த்தி அவர்கள் ,காலையில் என் உடன் பள்ளிக்கு வந்து விட்டு ,கட் அடித்து விட்டு எங்கோ சென்றுவிட்டார் .என்பக்கத்தில் தான் அவருக்கு இருக்கை. போகும் போது பள்ளி விட்டு வரும்போது புத்தக பையை எடுத்து வர சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . ஆசிரியர் வருகை பதிவு எடுக்கும் போது ராமமூர்த்தி எங்கே எனக்கேட்டார் ,"தெரியவில்லை ஐயா !பையை மட்டும் வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்" என கூறினேன் .அவன் பையை எடுக்க வந்ததால் என்னிடம் கூறு என சொல்லிவிட்டு பாடம் எடுத்தார் .மற்ற வகுப்பு ஆசிரியர்களும் வந்து விட்டு சென்றார்கள் ,ஆனால் ராமமூர்த்தி மட்டும் வரவேயில்லை .மாலை வகுப்பு முடியும் நேரம் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்கிறது ,

நண்பன் புத்தக பையை எடுத்து வர சொல்லி இருக்கிறான் ,ஆசிரியர் பையை அவன் எடுக்க வந்ததால் சொல்ல சொல்லி இருக்கிறார் என்ன செய்வது என்றே தெரியவில்லை ,வகுப்பு எடுத்த ஆசிரியர் சென்று விட்டார் .பள்ளி விடுவதற்க்கான மணி அடிக்க போகிறது ,மனம் ஆசிரியருக்கு தெரியாமல் நண்பனின் பையை எடுத்து கொண்டு செல் என சொல்கிறது ,பயம் வேறு மனதை கவ்வி கொண்டது ,அந்த வகுப்பு ஆசிரியர் மிகவும் கடுமையானவர் ,காதை பிடித்து கிள்ளினார் என்றால் ரத்தம் வந்த பிறகுதான் விடுவார் .

பள்ளி மணி அடித்தது முதல் ஆளாக என்பையையும் நண்பனின் பையையும் எடுத்துகொண்டு வேகமாக ஓடுகிறேன் ........................................அப்போது எல்லாம் வாசல் படி மிக மொத்தமான மரத்தினால் உயரமாக இருக்கும் ,நான் ஓடிய வேகத்தில் அதை கவனிக்காமல் தடுத்து அதன் கிழே இருந்த படிக்கட்டுகளில் பலமாக விழுந்து,என் வலது கையின் மணிக்கட்டு முறிந்து விட்டது ,இன்றும் என் மணிக்கட்டு வளைந்து இருப்பதை பார்க்கும் போது பள்ளி வராமல் கட் அடித்து சென்ற ராமமூர்த்தியும் ,பிறகு அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதும் பிறகு அவனே ரவுடியாகி என்னிடமே மோதி அவனை கையை கட்டி அடித்து இழுத்து வந்தது பிறகு அவன் தூக்கு மாட்டி இறந்து போனது ,அது தனி கதை ,அது பிறகு .............................

நாவல் மரம்

நாவல் மரம் 
பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது,எனது நண்பர் [அப்போது ]ராமமூர்த்தி எங்கள் தெரு நண்பர் ,பள்ளிக்கு ஒன்றாகவே செல்வோம் ,ஒன்றாகவே வருவோம் !மதிய இடைவேளையில் சாப்பிட்டு விட்டு ,பல்கலைகழக விளையாட்டு திடலில் இருக்கும் நாவல் மரத்தில் பழம் பறித்து தின்பது வழக்கம் !அந்த மதிய நேரத்தில் தான் காவலர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் !நாங்கள் மட்டும் அல்ல பள்ளியே அங்கே தான் இருக்கும் !மரத்தில் உச்சில் யார் ஏறுகிறார்களோ அவர்களுக்கு தான் பழம் கிட்டும் .இதில் உச்சியில் ஏறி பறிப்பதில் நான் தான் கெட்டி .

நண்பனை கிழே இருக்க விட்டு மரத்தின் உச்சிகிளையை நோக்கி ஏறிகொண்டிருக்கின்றேன்.மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கிழே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் !ஒற்றை கிளை எந்த பிடிமானமும் இல்லாமல் தனியாக படர்ந்து இருக்கிறது இது வரை யாரும் அந்த கிளைக்கு சென்றதே இல்லை அதனால் நிறைய பழம்!கொத்துகொத்தாய் தொங்குகிறது !உலுக்கினால் கிழே விழுந்து நசுங்கி மண்ணாகி சாப்பிட முடியாது !ஒரு பையை எடுத்துக்கொண்டு ஏறி விட்டேன் பைநெறைய பழம் !கிழே விழுந்ததால் .......................................
40 அடி உயர மரம் ....நினைக்கவே இப்போது பயமாக இருக்கிறது ,ஆனால் அப்போ இளம் கன்று எந்த பயமும் இல்லை !கிழே பார்க்கிறேன் திடிரென மாணவர்கள் சிதறி ஓடுகிறார்கள் !நண்பன் கிழே இருந்தது ,"டேய் !வாட்ச்மேன்டா! "என்று அலற நான் வேகமாக கிளையில் அழுத்தம் கொடுத்து ஏற மள மள என கிளை முறிய ........................................ இதோடு நமது வாழ்க்கை முடிந்ததது என்று எண்ணிவிட்டேன் .மரக்கிளை முறிந்து நாவல் மரத்தின் நாரில் மரக்கிளையும் நானும் தொங்குகின்றோம்.மெதுவாக ஏறி மரத்தின் மற்றொரு மரக்கிளைக்கு வந்த போதுதான் உயிரே வந்தது .அப்போதுதான் தெரிந்து கொண்டேன் நாவல் மரத்தின் கிளையை விட அதன் பட்டை வலுவானது என்று ,பலநாட்கள் நான் மீண்டும் அங்கு செல்லும்போது கிளை இலை எல்லாம் காய்ந்த பிறகும் பட்டையில் அந்த மரக்கிளை நீண்ட நாட்கள் தொங்கி கொண்டு இருந்த்தது .அதை நினைத்தால் இன்றும் அந்த மரப்பட்டை எனக்கு தெய்வமாக தெரியும் .

Saturday, 8 October 2011

நார்த்தம் மிட்டாய்

எனது தந்தையார் அண்ணா மீதும் பெரியார் மீதும் மிகவும் பாசம் கொண்டவர் ,ஒருமுறை அவர்கள் பிறந்தநாளும் என் பிறந்த நாளும் செப்டம்பர் 17  அன்று எங்கள் பள்ளிக்கு மிட்டாய் கொடுக்க வந்தார்கள் ,மாணவர்கள் எல்லோரும் அவரை சூழ்ந்தது கொண்டு மிட்டாய் வைத்திருந்த தட்டை பிடுங்க முயற்சிக்கிறார்கள் .அப்போது அவர் புதிதாக எடுத்து போட்டுக்கொண்டு வந்த சில்க் சிப்பா கிழிந்தது விட்டது ,அப்போதெல்லாம் நார்த்தம் மிட்டாய் என்று கூறுவார்கள்,அதை நினைத்தால் இப்போதும் என் அப்பாவின் அந்த சில்க் சிப்பா எனக்கு நினைவுக்கு வரும் .மேலும் இப்போதுள்ள மோட்டார் வசதிஎல்லாம் அப்போது இல்லை ,பல்கலை கழகத்திற்கு தண்ணிர் எடுக்க ஒரு அடிபைப்பை போட்டு ஒரு வயதானவர் தினமும் காலையில் இருந்தது மாலை வரை பைப்பை அடித்துக்கொண்டே இருப்பார் ,அது ஒரு குழாய் வழியாக பல்கலை கழகத்திற்கு போகும் ,அவரிடம் தினமும் வம்பு வளப்பது மாணவர்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக இருக்கும் ,அவரும் சிரித்துக்கொண்டே எங்களிடம் விளையாடுவார் ஆனால் வேலையில்  கண்ணாக இருப்பார் ,ஒருநாள் அவர் இறந்துவிட மாணவர்கள் அழுத காட்சியும் என் மனதில் நிழலாடுகிறது ,அது போன்ற மனித நேயம் இப்போது குறைந்துள்ளது கவலை அளிப்பதாகவும் உள்ளது . 

Thursday, 6 October 2011

ஐந்தாம் வகுப்பு பள்ளி

அதே ஐந்தாம் வகுப்பு பள்ளியில் பரிசோதனை செய்ய மாவட்டகல்வி அதிகாரி வர இருப்பதாக ஒருநாள் அறிவிப்பு செய்தார்கள் ,நாங்கள் எல்லோரும் பயந்தது கொண்டு அமைதியாக உட்கார்ந்தது இருந்தோம் ,எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக மாலதி என்ற ஆசிரியை இருந்த்தார்கள்,நல்ல சிவப்பாக பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள் ,தவறாக எடுத்துக்கொள்ளதிர்கள் ,அந்த வயதில் அழகு மட்டும் தான் தெரியும் . மாவட்டகல்வி அதிகாரி அவர்கள் வந்ததார்கள் ,ஏதேதோ கேட்டார்கள் பிறகு போகிவிட்டர்கள் ,ஆனால் பிறகு அடிக்கடி வர ஆரம்பித்தார்கள் ,எங்களுக்கு பயம் ஆனால் எங்களை ஒன்றும் கேட்பதில்லை ,மாலதி ஆசிரியையிடம் மட்டும் பேசிக்கொண்டிருப்பார்கள் ,பிறகு போகிவிடுவார்கள் இது பிறகு தினமும் நடக்க ஆரம்பித்தது ,பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குள் ஒரே கசமுசா என புகைய ஆரம்பித்தது ,நாங்கள் பள்ளிகல்வியை முடித்து விட்டு மேல்நிலை கல்விக்கு வந்துவிட்டோம் பிறகு என்ன நடந்ததது என்றே தெரியவில்லை ,இருந்ததாலும் அவர்கள் செயல் அந்த வயதில் என் மனதில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தியது .சமிபத்தில் பல்கலை கழகத்திற்கு வந்த மாவட்டகல்வி அதிகாரி என்னை பார்த்து ஒரு உதவி கேட்டார்கள் ,அப்போது தான் கூறினார் அவரும் மாலதி ஆசிரியையும் திருமணம் செய்துகொண்டதாக !இந்த விஷயம் சரியா தவறா தெரிய வில்லை ஆனால் என் மனதில் நீங்காத நினைவுகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது விட்டது .

சாதிஎன்றால் என்ன ?அது தேவையா ??

சாதிஎன்றால் என்ன ?அது தேவையா ??
இந்தியாவில் சாதி என்ற ஒரு கொடுமையான பிரிவு ,நினைக்கும் போதே நெஞ்சம் கொதிக்கும் .நல்ல நோக்கத்திற்காக செய்யும் தொழிலுக்கு ஏற்ப பிரித்த பிரிவுகள் பல்கி பெருகி பல ஆயிரம் சாதிகளாக உருமாறி இருக்கும் அவலம் தான் என்ன ? அக்காலத்தில் அறிவால் சிறந்த்தவர்களை பாணர்கள் [அந்தணர்கள் ],வியாபாரத்தில் சிறந்த்தவர்களை வைசியர்கள் [வணிகர்கள்]வீரத்தில் சிறந்த படை வீரர்களை சத்திரியர்கள் ,உடலால் உழைப்பவர்களை சூத்திரர்கள் என பிரித்து வைத்திருந்தார்கள் .அவைகள் கூட நல்ல தமிழ் பெயர்களாக பாணர்கள் ,படையாளுனர்கள் ,பெரும் வணிகத்தார் ,தோளர்கள் எனவே அழைக்கப்பட்டது ,இவர்களில் பலர் பல காலங்களில் தொடர்ந்தது ஒரே வேலையை பரம்பரை பரம்பரையாக செய்து வந்ததார்கள் ,அரசர்கள் அருகில் இருந்தவர்கள் செல்வந்தர்களாகவும் ,மற்றவர்கள் பொருளாதரத்தில் பின்தங்கியும் ,அறிவிலேயும் பின்தங்கி விட்டார்கள் .காலத்தின் கோலத்தால் சில உயர் பிரிவினர்களால் மிகவும் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் அடிமை படுத்தப்பட்டு எழ முடியாத வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டது ,"சிந்தியுங்கள்" சில சாதிகளை பாருங்கள் பள்ளம் தோண்டி மண் வேலை செய்பவர்கள் பள்ளர்கள் ,பறையை அடித்தவர்கள் பறையர்கள் ,படையை ஆண்டவர்கள் படையாட்சிகள்
சாதி உருவான வரலாறு புரியும் !!
இப்படி அனைத்து சாதிகளும் தொழிலை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது ."சிந்தியுங்கள் "இப்போது தொழில்கள் எல்லாம் மாறிவிட்ட பிறகு எல்லோரும் எல்லா தொழிலும் செய்யும் பொது இந்த சாதி தேவையா ? இவைகளுக்கு அரசு அங்கிகாரம் தேவையா ?முதல்வன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் சாதியை ஒழிக்க ஒருவழி சொல்வார்கள் .பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு கல்வி, பொருளாதாரத்திலேயும் அவர்கள் உயரும் வரை இட ஒதுக்கிடு தேவைதான் !இட ஒதுக்கீடு , சலுகைகள் அளிப்பதன் அடிப்படையில் மெல்ல மெல்ல அந்த சமுதாயங்கள் மற்றவர்களோடு தற்போது அறிவிலும் ,பொருளாதார ரீதியாகவும் போட்டியீட தொடங்கி இருக்கிறது ,
ஆனால் அவைகளுக்கு சாதி அடையாளங்கள் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் "அ" பிரிவு என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் "ஆ" பிரிவு என்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் "இ "பிரிவு என்றும் மற்றவர்களை" ஈ "பிரிவு என்றும் நான்கு பிரிவுகளை மட்டும் உருவாக்கி அரசு ஆவணங்களில் எந்த சாதி பிரிவுகளுக்கும் அடையலாம் இல்லாமல் முதலிலே செயல் படுத்த வேண்டும் .இதனால் உபசாதிகள் முதலில் ஒழியும் ,
மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவன் ,தான் முனேறிய வகுப்பை சார்ந்தவன் என்று கூறினால் அவன் தாழ்த்தப்பட்டவன் தான் என நிருபிக்கின்ற எந்தவித அரசு ஆவணங்களும் ஆதாரமாக இருக்க கூடாது .கலப்பு திருமணங்கள் அவர்கள் என்ன சாதி என அறியப்படாமலே நடப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்." அ "பிரிவை சார்ந்தவர்கள் கல்வி ,மற்றும் பொருளாதாரத்திலேயும் குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டால் "ஆ" பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் ,இதே போல் படிப்படியாக எல்லோரும்" ஈ "பிரிவுக்கு உயர்த்தப்பட்டு அனைத்து பிரிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும் ,
முதலில் ஊர் ஒதுக்கு புறத்தில் இருக்கும் சேரியை ஒழித்து ஊரோடு இணைக்க வேண்டும் ,அப்போது தான் சாதிகள் படிப்படியாக ஒழியும் !!
இதில் சாதி உருவான விதம் பற்றியும் ,அதை ஒழிப்பதற்கான வழிகளை பற்றியும் என் அறிவுக்கு எட்டியதை பதிவு செய்திருக்கின்றேன் ,உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்


 

Sunday, 2 October 2011

பள்ளிக்கூடம்

நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை தோழர் !அவர் எங்கள் தெருவை சேர்ந்த்தவர் தான் இப்போது கல்யாணம் ஆகி அவரின் மகளுக்கும் கல்யாணம் ஆகபோகிறது !!
இதை விட இன்னுமொருமுறை ,நான் 5 ம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றேன் ,முருகேசன் என்று ஒரு ஆசிரியர் மிகவும் அருமையாக வரலாறு பாடம் நடத்துவார் மற்ற பாடங்களும் நடத்துவார் ,ஆனால் படிக்க வில்லை என்றால் மிக கடுமையாக கண்டிப்பார் அவர் தண்டனை மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் ,சாக்பிசை இரண்டு விரல்களுக்கு இடையில் கொடுத்து விரல்களை அமுக்கி  உருட்டுவார் வலி உயிரே போகிவிடும் ,இருந்ததாலும் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த பாசம் ,அம்மா அடித்தால் அம்மா மீது வருமே ஒரு கோபம் அப்படி தான் அவர் மீது வரும் ,அப்படிப்பட்டவர் அவர் .திடிரென ஒருநாள் நான் வேளையில் இருந்து நாளை முதல் ஒய்வு பெறபோகிறேன் என அவர் பேச ஆரம்பிக்கும் போது அவர் அழ ஆரம்பித்து விட்டார் பள்ளியில் உள்ள நாங்கள் எல்லோரும் சத்தம் போட்டு பலமாக அழ ஆரம்பித்துவிட்டோம் ,அன்று நாள் முழுவதும் ஒரே அழுகைதான் ,அதோடு மட்டுமில்லாமல் வீட்டில் வந்தும் ஒரே அழுகை ,அதை நினைத்தால் இன்றும் எனக்கு ஆச்சிரியமாக இருக்கும் இப்படிஎல்லாம் இருந்த பள்ளிக்கூடம் இப்போது எப்படி ஆகிவிட்டது .
 

Saturday, 1 October 2011

என் வாழ்க்கை பயணம்

ஊதாங்குழல் பேய்

எனக்கு நினைவு தெரிந்து பொதுவாழ்வில் முதல் அனுபவமாக ,நான் 3வது படிக்கும் போது நிகழ்ந்தது,என் நண்பனும் நானும் மதியம் 1மணிக்கு பள்ளி முடிந்து சாப்பாட்டு தட்டு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது நண்பன் திடிரென மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டான் எழுப்பி பார்த்தேன் எழுப்ப முடியவில்லை ஊருக்குள் ஒடி வந்து அழுதுகொண்டே கூறிய போது ஊரே,"அய்யய்யோ!!என் மகனை ஊதாங்குழல் பேய் அடித்து விட்டது"என்று அலறி அடித்துக்கொண்டு ஒடி வந்தது இன்றளவும் என் மனதில் இருந்து நீங்கவில்லை!!!

திருடன் என்று பட்டம்

நம்மில் பலருக்கு இந்த தொடர் பழைய நினைவுகளை அருமையாக அசைபோட வைக்கிறது என நினைக்கின்றேன் .தொடரட்டும் நினைவு அலைகள் !!
நான் நான்காவது படிக்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி ,பள்ளியில் எதற்கோ ஒரு டப்பாவில் காசு போட்டு சேர்த்து வைத்திருக்கிறார்கள் ,அந்த டப்பாவில் காசு தான் இருக்கிறது என்று எனக்கு தெரியாது ,சக மாணவி ஒருவர் ஆசிரியர் எனக்கு கொடுத்தார் பார் என்று அந்த டப்பாவை ஆட்டி ஆட்டி காட்டினால் ,அதன் மேல் எனக்கு ஆசை வந்துவிட்டது ,யாரும் பார்க்காத சமயத்தில் அந்த டப்பாவை எடுத்து வந்து விட்டேன் பிறகு பார்த்தால் அது முழுக்க காசு இருக்கிறது ,பயந்துபோய் பக்கத்து வீட்டில் பதுக்கி வைத்து விட்டேன் .பள்ளியில் கேட்டபோது சொல்வதற்கு பயம் ,அதனால் சொல்லவில்லை ,அவ்வளவு காசுகளையும் அப்போது எனக்கு செலவு பண்ணவும் தெரியாது ,அதை பார்த்து பார்த்து பயம் வேறு வந்தது விட்டது ,ஒரு வழியாக சக மாணவியிடம் சொல்லி ஆசிரியர்களுக்கு தெரிந்து ,வீட்டில் அடிவாங்கி ,பள்ளியில் திருடன் என்று பட்டம் வாங்கி நான் அனுபவித்ததை நினைத்தால் இன்றும் அவமானமாக இருக்கிறது .

Wednesday, 27 July 2011

பாரதபிரதமருக்கு ஒர் கடிதம்[வேண்டுகோள்]


ஐயா,
வணக்கம்,நான் மனிதநேயத்தோடு  இந்தியாவில் வாழ்கின்ற தமிழன் என்பதில் பெருமைகொள்கின்றேன் .இந்தியா மிக பலமான நாடக உருவாகிவருவது மிக்க மகிழ்ச்சி .அதில் உள்ள சில குறைகளையும் கலைந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .கடந்த ஒருமாதகாலமாக
ஓர்குட் குழுமத்தில் "உலக தமிழ் மக்கள் அரங்கத்தில் " கலைஞ்சரே   ஏன் இந்த தோல்வி ? என்ற தலைப்பில் 250 க்கு மேற்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன." மாநில சுயாட்சி கோரிக்கையை வலுவான  கட்சிகள் முன்னெடுத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்புகள் பிரகாசமாக உள்ளது "என்ற கருத்து பலவழிகளில் முன்வைக்கப்பட்டது .ஏன் நமது இந்தியாவில் மாநிலங்களுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் சுயாட்சி அதிகாரம் அளிக்க கூடாது ?ஏன் இந்தியாவை United States of India வாக மாற்றக்கூடாது?

Tuesday, 26 July 2011

"கோபம் கூட புன்னகை தான்".........

"கோபம் கூட புன்னகை தான்"..........
"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறி கொள்ளப் படுவது,
நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை"
"உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள்' அல்ல.
கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் 'நல்லவர்கள்' தான்".........
நம்பிக்கை என்பது விழித்திருக்கும்
நிலையில் நாம் காணும் கனவு.....
"பிறப்பால்
வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால்
வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில்
யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது
வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்"....
"நீங்கள் என் வார்த்தைகளை படிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் உங்கள் கண்கள் வழியே உங்கள் இதயத்தை தொடுகிறேன்"....
"மறக்கப்படும் அன்பும், மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது".......
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர
வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்...........சுவாமி
விவேகானந்தர்.
"நான் ஒழிக்க வேண்டும் என்று கூறுவது, இருக்கின்ற
ஒன்றை அல்ல . இல்லாததை இருப்பதாய் கருதிக்கொண்டு மானமும் அறிவும் கெட்டு
வாழ்பவர்களின் முட்டாள் தனத்தை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம்" ---- பெரியார்
எவன்
ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக
இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ
அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும்
பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். - புரட்சியாளர்
‍அம்பேத்கர்.....
தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும்,
தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன.
இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி
எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல....
-சார்லஸ் டார்வின்
"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே
அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர்,
மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து
வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.
அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து
இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும்
பொழுது சொர்க்கலாவது இனிய மணம்
உடையதாக வெளிப்படட்டும்" ....புத்தர்
"பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்.......
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்".........

Saturday, 23 July 2011

தோழர்களே !இங்கே ஒருங்கிணைவோம் !!

தனி மனித ஒழுக்கம் உள்ளவர்களா!,சமுக அக்கறை உள்ளவர்களா!,மனிதநேயத்தையும் ,மனித உரிமைகளையும் மதிப்பவர்களா!,அகிம்சை  மீது நம்பிக்கை உள்ளவர்களா !மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உள்ளவர்களா !நியாயமான  காரணங்களுக்காக போராடுபவர்களின் ஆதரவாளர்களா !
ராணுவம் இல்லா உலகை காண ஆசைபடுபவர்களா!

தோழர்களே !இங்கே ஒருங்கிணைவோம் !! 

Wednesday, 20 July 2011

இனத்துரோகிகளே!


துரோகி உன் பெயர் ...
கொத்து கொத்தாய் கொன்றது நினைவில்லையா?
கொடுமையின் கோரத்தை நிகழ்த்திவிட்டு
ஒட்டு கேட்கும் ராஜ்பக்சேயுடன் கைகுலுக்கும்_துரோகி
‍‍‍‍‍‍________________________
கிளிநொச்சி வீர‌த்தின் விளைநிலம்
மண்ணே! உம்மைவிழுங்கிவிடும்
மாவீரர் முச்சே உம்மை மரணத்தின் வாசலுக்கு விரட்டும்
இனி தமிழினம் உம்மை காரி உமிழும்!
கை தட்டு ஒசைகளை கேட்ட நீ வேறு தட்டு ஒசைகளையும் இனி
தமிழக தரணியில் கேட்க வேண்டியிருக்கும்!
மனம் மாறிய தோழமைக்கு வண‌க்க்ம்!
மிர‌ட்டிய கோழைகளே! தமிழகத்து தமிழன் இனத்தூரோகம்
செய்ய துணியமாட்டான்!அப்படி செய்தால் தமிழ்தாயிக்கு பிறந்திருக்கமாட்டான்!
காலத்தின் கோலம் கைகட்டி கோழையாய் நிற்கின்றோம்
இனத்துரோகிகளே!காலம் வரும் களம் காண்போம் கைகோர்த்து
சூழும் இனப்பகை சூரியன் கண்ட பனிப்போல் பறக்கும்! பார்! பார்!பார்!
Tongue Tongue Tongue Tongue Tongue

Sunday, 17 July 2011

தனிமனித உரிமைகள் என்னென்ன?


தனிமனித உரிமைகள் என்னென்ன?
*தன்னிறைவு பெற உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சகூலி கிடைக்க உத்திரவாதம் இருக்கவேண்டும்.
*குறைந்தபட்சகூலிக்குள் உணவு, உடை, இருக்க இடம், குடும்ப கல்வி,ஆரோக்கியவாழ்வுக்கு உத்திரவாதம் இருக்கவேண்டும்.உலகம் உருவாகி பலகோடிஆண்டுகள் ஆகியும் அடிப்படை தேவைக்கும்,அறிவுவளர்ச்சிக்கும் ஆளாய்பற‌ப்பது உல‌குக்கே ஏற்ப்பட்ட அவமானமாக கருதவேண்டும்.
*உலக மனிதன் சிந்திக்கவும் ,சிந்தித்தவற்றை விவாதிக்கவும் அறிவு அரங்கங்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தவேண்டும்.
*அறிவுக்கும் ,நடைமுறைக்கும் ஒவ்வாத உலகமக்களுக்கு இழிவுதரும் பழக்கவழக்கங்களை சிந்தனை அரங்கங்களிலே விவாதித்து தடை விதிக்கவேண்டும்.
*சிந்தனை அரங்கத்தில் விவாதிக்கப்படவேண்டிய பொருள்களுக்கு உச்சநிலை எதுவும் நிர்ணயிக்ககூடாது. எந்த பொருள்பற்றியும் உலக மக்கள் விவாதிக்க அரங்கங்கள் ஏற்படுத்தவேண்டும்.
*கல்வி முறையில் இன்றைய நிலையில் உள்ள ஆராய்ச்சிமுடிவுகள் அனைத்தும் பள்ளிகல்வி நிலையிலேயோ அல்லது இளநிலைபட்டத்திற்குள்ளாகவோ எளிமையாக கற்றுதரப்பட்டிருக்க‌வேண்டும். அனைத்தும் செயல்முறை கல்வியாக‌ அமைக்கப்படவேண்டும்.பள்ளி இறுதி நிலையிலேயே மாணவண் தானே இன்றைய உயர்ந்த தாயாரிப்புகளான‌ கணிணியை தயாரிக்கவும் ,இராக்கட் தொழில் நுட்பம் வரை முழுமையாக கற்று தெரிந்திருக்கவும் வகைசெய்ய வேண்டும். மேற்கொண்டு ஆய்வுக்கல்விகளையே ஊக்குவிக்கவேண்டும்.
*தாய்மொழியில் கல்வியையும்,தெளிவுர உலகதொடர்பு மொழியையும் கற்று தரப்பட்டிருக்கவேண்டும்.
*உலகில் உள்ள எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரவும், தங்கவும், தொழில் செய்யவும் அனுமதிக்கப்படவேண்டும்.
*அரசுகளின் அனைத்து நிலை செயல்பாட்டையும் பற்றி தெரிந்துகொள்ள முழு உரிமையும் அளிக்கப்படவேண்டும்.
*அரசின் பிடிக்காத செயல்பாடுகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்படவேண்டும்.பெரும்பான்மை மக்கள் எதிர் முடிவுகள் எடுத்தால் அரசின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
*மக்களின் அடிப்படை கடமைகள் சட்டமாக்கப்பட வேண்டும்.
*சாதி,மதம்,மொழி,நாடு தொடர்பான எந்தவிதமான சான்றுகளும் அரசு பதிவுகளில் இடம் பெறக்கூடாது.ஒருவனின் வாய்வழியின்றி எந்தவித அரசு ஆதாரங்களும் இருக்க அனுமதிக்க கூடாது.
*சாதி,மதம்,மொழி,நாடுகளுக்கு அப்பாற்பட்டு திருமணபந்தங்களை ஏற்படுத்த வேண்டும்.
*உடை,சின்னம் என்ற எதுவும், இவர் இதை சார்ந்தவர் என்ற அடையாள‌ங்களை முன்னிருத்த அனுமதியளிக்க‌கூடாது. தற்போது இருக்கின்ற மத கோட்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிவியலுக்கும் நடைமுறை உண்மைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக உள்ளவைகளையும், மூடபழக்கவழக்கங்களையும் முற்றிலும் தடை செய்யவேண்டும்.
இவைகளை செய்தால் மனிதன் மனிதனாக வாழ்வான்.இல்லையேல் இப்போது இருக்கின்ற போட்டி பொறாமை உலகில் மாக்களாக தான் வாழவேண்டும்.
Shock Shock Shock Shock Shock Shock Shock Shock
இணைப்புகள்: 

வெளிச்சம்

இருட்டின் எதிரி
பனியின் தூரோகி
நிழலின் சக்களத்தி
நிலவின் ஆடை அவிழ்ப்பவன்
விண்மீனின் வில்லன்‍‍‍_ஆனால்
அவ்ன் இல்லை என்றால் இவை எல்லாம்..............? Star Star Star Star Star Star :: நன்றியுடன்: http://vizhippuulagam.blogspot.com/

இந்திய ஜனநாயகத்தில் தேவையான உடனடி மாற்றம்?


" bye bye bye ஜனநாயகத்தில் ஊழலும்,விரக்தியும் காணப்படுவதை நீக்கினாலே இந்திய ஜனநாயகம் வலுப்படும்!"
Choices

Wednesday, 13 July 2011

குண்டுவெடிப்பு

ம்பாயில் மீண்டும் குண்டு,
இந்தியாவே! நீயா உலகவல்லரசு
நாட்டையே காக்க இன்னும் நாதியில்லை
உலக வல்லரசு நப்பாசை நமக்கு எதற்க்கு
பாகிஸ்தான் மீது பழியைபோட்டு
மீண்டும் நீ போடு இராஜந‌டை
விரைவில் எதிர்பார்ப்போம் அடுத்த குண்டை............... http://vizhippuulagam.blogspot.com/

Saturday, 9 July 2011

தமிழா!தமிழா!தமிழா!

 தமிழா!தமிழா!தமிழா!
   இந்து மதம்  என்ன சொல்கிறது ?
கிறிஸ்டியன் ,இஸ்லாம் மதங்களில் உருவ வழிபாடுகள்  இல்லாமல் கடவுளை காண்கிறார்கள் ..இந்து மதத்தில் உருவம் இல்லாத கடவுளுக்கு  உருவம் கொடுத்து வணங்குகிறார்கள் .ஆரம்ப காலத்தில் இயற்கையையே தெய்வமாக  தெய்வமாக வழிப்பட்டு வந்தத இனத்தினருக்கு காலப்போக்கில் அந்த இயற்கைக்கு  கற்பனையால்  உருவம் தந்தார்கள். இந்துக்கள் .இந்துமதம்  என்று ஒரு மதம் பழம் இந்தியாவில் இருந்ததே இல்லை .ஆங்கிலேயர்களே இந்து மதத்தினர் என்று பெயரிட்டு அழைத்தார்கள் .அதற்க்கு முன்னால் இந்த இந்து மதத்தில்  சைவ மதம் வைணவ மதம் ஜைன மதம் புத்த மதம் என பல மதங்கள் இருந்தன .ஆங்கிலேயர்கள் தான் அவைகளை ஒருங்கிணைத்து இந்து மதமாக உருவாக்கினார்கள் .சிவன் பார்வதி பிரமன் திருமால் முருகன் பிள்ளையார் இலட்சுமி
 

Friday, 8 July 2011

கலைஞரே! ஏன் இந்த தோல்வி?



கலைஞரே! ஏன் இந்த தோல்வி? என்னுள் எழும்பிய வினாவை உலகுக்கு இயம்புகின்ரேன்.என்ன செய்யவில்லை கலைஞர்,குடிசை மாடியாக கனவு கண்டது தவறா? 108 தந்தது தவறா?விவசாய கடன் தள்ளுபடி தவறா? வட்டியில்லா கடன் தந்தது தவறா? மருத்துவ காப்பீடு தந்தது தவறா? அரசு ஊழியர்களுக்கு அள்ளி தந்தது தவறா? ஒரு ரூபாய் அரிசி தவறா? டிவி தந்தது தவறா?.........................இப்படி நிறைய "தவறா?"க்களை அடுக்கிகொண்டே போகலாம்.இருப்பினும் தோல்வி ஏன்?
*காங்கரஸுடன் கூடியது தவறா?
*உங்கள் குடும்பத்தை முன்னிறுத்தியது தவறா?
*விஜயகாந்த் எழுச்சியா?
*ஸ்பெக்ட்ரம் ஊழலா?
*இலங்கை பிரச்சனையை கையாண்டவிதம் தவறா?
*ஜெயலலிதா சொல்வதுபோல் அவர் முன்னர் செய்த ஆட்சிதான் மக்களுக்கு பிடிக்கிறதா?
*மக்கள் எதையும் சிந்திக்காமல் மாற்றம் வந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களா?
*உங்கள் உள்ளுர் பிரதிநிதிகள் உங்களுக்கு குழிதோண்டி விட்டனரோ?
எப்படி இருந்தாலும் இந்த தோல்வி உங்களுக்கு மட்டும் ஏற்பட்டது அல்ல,தமிழ்நாட்டு மக்கள் மெளனமாக எதையோ சொல்ல வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
இருப்பினும், கீழே இணைத்திருக்கும் காணொலி காட்சி கலைஞராக நீங்கள் இன்றும் இருந்தால் உங்கள் தோல்வி தமிழனுக்கு ஏற்பட்ட தோல்விதான், கலைஞரே!
http://www.youtube.com/watch?v=VeF9mmQmOUo&feature=player_embedded

Thursday, 7 July 2011

கலைஞருக்கு மாற்று வேண்டும்!



இந்தியாவில் என்ன நடக்கிறது?
என் இந்தியநாடே! என்ன ஆயிற்று உனக்கு?
ஊழலை பற்றிய பேச்சு ஊரெல்லாம் நாறுகிறது!
தினம் ஒரு மத்திய மந்திரி பதவிவிலகுகிறார்!
ஊழலுக்கு எதிராய் புத்தர் வேடம் பூண்டு சாமியார்கள்!
தமிழகத்து ம்ந்திரிகள் மட்டும் தான் கொள்ளையர்களா?
மற்றோர் எல்லாம் புனிதர்களா?
எத்தனை ஊழல் நடந்தது எந்த அரசியல்வாதி சிறையில் வாடுகிறான்!
இராஜிவ்காந்தி மீதான ஊழலில் எத்தனை நாள் சிறையில் இருந்தார்?
உயிரோடு அமெரிக்காவில் உலவும் குவத்ரோச்சியை இந்தியா கொண்டு வரமுடியவில்லை என்று இராஜிவ்காந்தி மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவில்லையா?
இந்திரா மீதான ஊழல் வழக்கு என்ன ஆயிற்று?
இன்னும் எத்தனையோ வழக்குகள் தள்ளுபடி ஆகவில்லையா?
திமுக மந்திரிகள் மட்டும் சிறையில் ஏதோ நெருடுகிறது! நான் திமுகவுக்கு வக்காலத்து வாங்கவில்லை!
அரசியல் சதி பின்னப்படுகிறதோ?
தமிழக அரசியலில் தமிழுணர்வாள்ர்கள் ஒரங்கட்டபடுகிறார்களோ!
திமுகவை ஒழித்துவிட்டு மீண்டும் தேசிய அரசியல் தலைதூக்க சதிவலை பின்னப்படுகிறதோ!
தெரிந்தோ தெரியாமலோ, தன் குடும்பத்தை முன்னிருத்தி தனக்குபின் திமுகவை அழிக்க நினைக்கிறாரா?_கலைஞர்!
திமுக அதன் உண்மையான முகத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது தமிழினத்துக்கு ஆபத்தைதான் தரும்.கலைஞர் அதை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் தகர்ந்து வருகிறது.கலைஞரை ஒழித்துவிட்டாலோ! அல்லது குடும்ப அரசியலில் சிக்கி அவரே அழிந்தாலோ! இந்திய தேசியவாதிகளுக்கு வைகோ,சீமான்,நெடுமாறன்,இராமதாஸ்,திருமாவளவன் இவர்கள் எல்லாம் தூசுக்கு சமம்,இவர்களை ஜெயலலிதாவே எளிதாக ஒழித்துவிடுவார்.எனக்கு என்னமோ அரசியல் சூழ்ச்சி தமிழகத்தில் அரங்கேருவது போல் தோன்றுகிறது!
தமிழர்களே!ஜாக்கிரதை!
கலைஞருக்கு மாற்று வேண்டும்!ஆனால் அது ஜெயலலிதா இல்லை!இல்லை!!இல்லை!!!இல்லை!!!!இல்லை!!!!!...................... http://vizhippuulagam.blogspot.com/
Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm :

Tuesday, 5 July 2011

வேலியே நீ பயிரை மேயலாமா?


வேலியே நீ பயிரை மேயலாமா?
நடுத்தெருவில் நாயினும் கீழாய் காவல்துறை.கண்ணுற்றபோது கலங்காமல் இருக்கமுடியவில்லை.காக்க வேண்டிய காவல்துறையே குடிபோதையில் கலாட்டா செய்தால் மரியாதை அவர்கள் மீது எப்படி வரும்.காதலனை ஏமாற்றி கல்லூரி மாணவியை கடத்திய திருச்சி இன்ஸ்பெக்டர் கைது இது இன்றைய செய்தி,இதுபோல்.......*லாக்கப்பில் அடித்து மரணம்,*காவல் நிலயத்திலேயே கற்பழிப்பு *காவல் நிலயத்திலேயே கட்டபஞ்சாயத்து *
இப்படி தினம் ஒரு செய்தி வருகிறதே இதை தடுப்பது எப்படி என்று ஆட்சியாளர்கள் ஒருகணமாவது சிந்தித்ததுண்டா? இதோடு இணைத்துள்ள கானொலியை பாருங்கள் ஒரு பெண் போலிஸ் ஒரு பத்திரிக்கைகாரர் காலில் விழுவதை .இப்படி மதிக்க வேண்டிய காவல்துறை கண்டவர் கால்களில் மிதிபடுகிறதே,நல்லவர்களாக இருப்பவர்கள் உள்ளம் அதை கண்டு வேதனைபடுகிறதே! ஆட்சியாளர்களளே! இதை மாற்ற நடவடிக்கை எடுங்கள் . காவல் துறையின் புகழை காப்பாற்றுங்கள். தனிமனித ஒழுக்கம் உள்ளவர்களை மட்டும் காவல் துறையில் பணியாற்ற அனுமதியுங்கள் .புகை பழக்கம் இருந்தால் கூட நியமிக்காதீர்கள். நியமித்த பிறகு செய்தால் என்ன செய்வது ? என நீங்கள் கேட்பது புரிகிறது, தயவு தாட்சணயம் காட்டாதீர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யுங்கள் அப்போதுதான் காவல் துறை மீதான மதிப்பு உயரும்http://vizhippuulagam.blogspot.com/ Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm

Monday, 4 July 2011

பயணங்கள் முடிவதில்லை

காற்று பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
சூரிய ஒளி, பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
உலகமே பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
மனித வாழ்வு  பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
ஏன் என்ற கேள்வி என்னுள்  பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
அன்புடன்:http \\ www  . விழிப்பு உலகம் .com

எங்களைபற்றி

சகோதர ,சகோதரிகளே !
                      ஒரே  உலக அரசின்  கீழ் ,இராணுவமே  இல்லாத  உலகத்தில் ,தனித்த சுயாட்சி  உள்ள தமிழ் நாட்டில்  வாழும் தமிழரை  காண்போம்