Friday, 28 October 2011

வறுமை

வறுமை

என் சிறுவயதில் நான் அனுபவித்த வறுமையை யாருமே அனுபவிக்க கூடாது என்று என் மனதுக்குள் இன்றும் அழுகின்றேன் ஐயா !!
என் தந்தையர் கலப்புமணம் செய்துகொண்டவர் !அதை விட என் தாத்தா பாட்டியின் கதை வேறுவிதமாக இருக்கும் !அது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கின்றேன் !!
என் பாட்டி தன் கணவரை பிரிந்து என் அப்பாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார்கள் !!
என் அப்பா வேறு சாதியை சேர்ந்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள் ,ஆகையால் குடும்ப வழிகளில் பெரிய ஆதரவுக்கு யாரும் இல்லை .
அண்ணாமலை பல்கலைகழகத்தில் உணவு பரிமாறுபவராக இருந்தார்கள் ,மிக மிக குறைவான சம்பளம் தான் தருவார்கள் ,அதை வைத்து இருவர் கூட மூன்று வேளை சாப்பிட முடியாது ,அவ்வளவு வறுமை ,ஆனால் நாங்கள் தம்பி மூன்று பேர் தங்கை ஐந்து பேர் பாட்டி ,அம்மா மொத்தம் 11 பேர் சாப்பிட வேண்டும் .நிலைமையை யோசித்து பாருங்கள் ஆனால் வாழ்ந்தோம் ,அது தான் வாழ்க்கை ................................ 
எங்கள் வாழ்க்கை எப்படி ஓடியது என்றால் ,பல்கலை கழக விடுதியில் வேலை பார்த்த என் தந்தையார் அங்கே மாணவர்கள் சாப்பிட்டது போக மீந்து இருக்கும் சாப்பாட்டை எடுத்து வருவார்கள் !அதுவும் சட்டப்படி எடுத்துபோக கூடாது ,விடுதிக்கு பின்புறம் மேயும் பன்றிகளுக்கு தான் கொட்ட வேண்டுமாம் !அதை தெரியாமல் வயிற்றில் கட்டி எடுத்து வருவார்கள் அதுதான் எங்களுக்கு சாப்பாடே !நாங்கள் எல்லோரும் பள்ளிக்கு கட்டாயம் போகவேண்டும் இந்த கஷ்டத்தில் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கின்றிர்களா!!அது தான் தாயை தெய்வம் என்று சொல்கிறோமே அந்த தெய்வத்தின் பிடிவாதம் !எங்கள் தெருவிலேயே நான் தான் முதல் பட்டதாரி என்றால் எங்கள் தெய்வத்தின் செயல் பாட்டை நினைத்து பாருங்கள் !!இரவு அப்பா எடுத்து வரும் [வேலை முடிந்து 11 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார் ,சில நாட்கள் 12 மணிக்கு மேல் கூட ஆகிவிடும் .]சாப்பாடு மறுநாள் காலையில் சாப்பிடுவோம் ,சாப்பிட்டு பள்ளிக்கு சென்றால் மதியம் சாப்பாட்டுக்கு 3 கிலோமீட்டருக்கு மேல் நடந்து வந்து தான் சாப்பிட வேண்டும் ,நடந்து அல்ல ஒரு மணிக்கு பள்ளி விட்டால் ஓடிவருவோம் !சாப்பிட்டு விட்டு மீண்டும் ஓடுவோம் அப்போது தான் பள்ளிக்கு இரண்டுமணிக்கு செல்லமுடியும் ,இடையில் நாவல் பழம் பறிக்க முடியும் .

தினமும் இப்படி தான் வாழ்க்கை போகும் !அப்பா வெறும் சாப்பாடு ,தோசை ,இட்லி ,பூரி இப்படி வகை வகையாக எடுத்து வருவார் ஆனால் எனக்கு தெரிந்து அவைகளுக்கு தொட்டுக்க வைத்து நான் சாப்பிட்டது மிகமிக குறைவு !!வறுமை அப்படி !!வெறும் சோறை தண்ணிர் விட்டு வெங்காயம் தொட்டு தான் சாப்பிடுவோம் !!
இதை விட கொடுமை அப்பாவிடம் இருந்த ஒரு மோசமான கெட்ட பழக்கம் சூதாட்டம் !!!
சம்பளம் வாங்கி கொண்டு சூதாட கிளம்பி விடுவார் அப்போது எங்களுக்கு சாப்பாடு ............................................................................ கொடுமை சார் அது !!
கண்ணீர் வந்ததால் மன்னித்து கொள்ளுங்கள் .............. 

அம்மாவுக்கு இந்த வறுமையை ஓட்ட கண்டுபிடித்த வழிதான் இட்லி சுட்டு விக்கிறது ,ஆடு மாடுகள் வளர்ப்பது ,படித்துக்கொண்டே இந்த வேலைகளுக்கு உதவி செய்வது இருக்கிறதே !!மிக கொடுமை அது !!காலையில் எழுந்த்தவுடன் அம்மா பாலை கறப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாக கொடுக்க வேண்டும் ,அவைகளுக்கு கழனிநீர் வைக்க வீடு வீடாக சென்று எடுத்து வரவேண்டும் அதற்க்கு ஈடாக சாணத்தை அவர்கள் வீட்டுக்கு கொண்டு கொடுக்க வேண்டும் ,வீட்டில் மீந்து இருக்கும் சாணத்தையும் இன்னும் பல்வேறு இடங்களில் இருந்து பொருக்கி வரும் சானங்களையும் வரட்டி தட்ட அம்மாவுக்கு உதவி புரிய வேண்டும் ,
காலையில் அவிழ்த்து விடும் மாடுகள் மாலையில் தானாக விட்டுக்கு வந்து விடும் .
சில நேரம் அந்த மாடுகள் வீடு வாராமல் காணாமல் போகிவிடும் ,அப்போது வீடு படுகின்றபாடு சொல்லி மாளாது !!......................ஆனால் அதையும் சொல்கின்றேன் !!
காணமல் போன மாட்டை கண்டு பிடிக்க வீட்டில் உள்ள எல்லோரையும் ,வீட்டை விட்டு விரட்டிவிடுவார் அம்மா !!
அந்த மாடு எவர் வீட்டு வயலிலாவது மேய்ந்து இருக்கும் வயல் சொந்தக்காரர் மாட்டை பிடித்து கொண்டுபோய் எதாவது ஒருகிராமத்தில் வீட்டு தோட்டத்தில் கட்டி போட்டு இருப்பார் அதை கண்டு பிடிப்பது சிபிஐ வேலையை விட கடினமானது ,பல நேரம் கண்டுபிடித்து விடுவோம் ,சிலநேரம் கண்டுபிடிக்க முடியாது ,அப்போதெல்லாம் அம்மாவின் அழுகை என் கண்ணில் இன்றும் நிழலாடுகிறது !!
இந்த வருமானம் ஒட்டு மொத்தமாக அதில் போகிவிடும் ,பல வருட உழைப்பு சிலமணி நேரத்தில் அழிந்து விடும் .இருந்தததோ ஒரு சிறு ஓலை குடிசை வீடு ,அதை கூட பலவருடங்கள் ஓலை கூட மாற்ற முடியாது ,மழைக்காலங்கள் வந்தால் நாங்கள் படுகின்ற கொடுமை சொல்லி மாளாது !!
ஆம் !தோழர் பெய்கின்ற மழை எல்லாம் எங்கள் வீட்டின் உள்ளே தான் பேயும் வீட்டின் உள்ளே வாய்க்கால் வெட்டி தண்ணிரை வெளியேற்றுவோம் மீதி இருக்கும் இடத்தில் எங்கள் தங்கைகளை படுக்க வைத்திருப்போம் ,தம்பிகளை பக்கத்து வீடுகளுக்கு அனுப்பிவிடுவோம் !!எனக்கு வினவு தெரியும் வரை இதுதான் ஐயா!!நடந்தது,
என் மனதில் அப்போது ஓடியதுஎல்லாம் ஒழுகாத வீட்டில் குடி இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை .
அந்த மழை காலங்களில் தங்கைகளை தூங்க வைத்துவிட்டு நானும் என் அம்மாவும் இரவு முழுதும் அழுத அழுகை என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது !!
அதனால் தான் குடிசை வீடுகள் அனைத்தும் ஒட்டு வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் ,நானும் ஒரு ஒழுகாத வீடு கட்டினேன் ...........................
ஆடையே இல்லாத கணவனைபோலும் ,கூறைகுடிலில் வாழும் மனைவிபோலும் தான் எங்கள் வாழ்க்கையும் ,தீபாவளி வந்துவிட்டால் ,அம்மா படும் வேதனை சொல்லி மாளாது ஐயா!!
நாங்கள் தீபாவளிக்கு மட்டும் தான் புது துணியை பார்க்க முடியும் ,அதுவும் இருப்பதிலேயே மிக குறைந்த்த விலை துணிதான் எடுப்பார்கள் ,அதுவும் அப்பாவுக்கு அலுவலகத்தில் கூட்டுறவு துணிக்கடையில் கடன் கொடுப்பார்கள் அந்த துணிதான் ,வெடி எல்லாம் மற்றவர்கள் வெடித்து போட்ட மீதி தான் .
சில நேரம் அப்பாவுக்கு எதாவது பணம் மாணவர்களிடம் வசூலித்து தருவார்கள் ,அப்பா அதை எடுத்துக்கொண்டு சூதாட கிளம்பிவிடுவார்கள் ,அவரை தேடி நானும் அம்மாவும் ஒவ்வொரு கிளப்பாக தேடி அலைவோம் ,கிடைக்க மாட்டார்கள் ,கிடைத்தாலும் சூதாட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு ஜெஜ்ஜிக்கிட்டு வரேன் போங்க என்று விரட்டுவார் ,அம்மா அழுதுகொண்டே வருவார் ,பலநேரம் அவர் தாலி தான் எங்களுக்கு தீபாவளி கொண்ட்டாடும்.
அவ்வளவு கொடுமைகள் அனுபவித்தாலும் ,அந்த பாசம் எங்களை கட்டிபோட்டு விடும் ஐயா !!
அப்பா பல நேரம் என்னிடம் அழுவார் இந்த பாழாய்ப்போன பழக்கம் என்னை விடாமல் குடும்பத்தை அழிக்கிறதே என்று அழுவார் .
இதை விட கொடுமை ஒன்னு இருக்கு ,வருடத்தில் இரண்டுமாதம் கல்லூரி மூடிவிடுவார்கள் ,அப்போது அப்பா சாப்பாடு எடுத்து வரமுடியாது ,அப்போது எல்லாம் பலநேரம் நாங்கள் பட்டிநிகிடந்த்தே பழகிவிட்டோம் ,எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு அரவை மில் இருக்கும் ,அப்போது எங்களுக்கு விடுமுறையில் நான் அந்த மில்லுக்கு வேலைக்கு போவேன் ,கூலி என்ன தெரியுமா ?
அரைத்து மீந்துபோன குருணை தான் ஐயா !!இப்போதெல்லாம் ரேசன் அரிசியை கூட மக்கள் பலர் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் ,அந்த குருணையை கோழிக்கு வைத்தால் கூட சாப்பிடாது ஐயா !அவ்வளவு கல் இருக்கும் அதை வாங்கிகொண்டு வந்தது சுத்தப்படுத்தி கஞ்சி தான் காச்சி குடிப்போம்.
அந்த குருணையை வாங்க செய்ய வேண்டிய வேலை இருக்கிறதே !!ஐயோ !!.......................................... 

காலை 8 மணிக்கு எல்லாம் அந்த மில்லில் இருக்க வேண்டும் அதுவும் எல்லோருக்கும் வேலை இருக்காது குறிப்பிட்ட சிலரைத்தான் தேர்வு செய்வார்கள் ,அதில் நாமும் ஒருவராக இருந்தால் நமக்கு அதிஷ்டமே!!

அப்படி உள்ளே போனால் 500 முட்டைகளுக்கு மேல் நெல்லை வெவித்து முட்டு முட்டாக கொட்டி வைத்திருப்பார்கள் ,அவைகளை முறத்தால் பரப்பி .பல்பலகை போட்டு ,காலால் கிண்டி ,பிறகு முறத்தால் கிளறி அடிக்கிற வெயில் அனைத்தும் நாள் முழுவதும் நம்மேல் தான் ,அவைகளை காயவைத்து ,மூட்டையில் அள்ளி அரவை பெட்டியில் கொட்டி ,மறுநாள் வெவியலுக்கு பதரை அள்ளி கொட்டி விட்டு அவைகளின் கறிகளை சுத்தப்படுத்தி ,கூலியை வாங்க இரவு 10 மணியாகி விடும் ,நாங்கள் சின்ன பையன் என்பதால் 2 படி குருணை மட்டும் தான் ,பெரியவர்களுக்கு 2 ரூபாய் கூலி சேர்த்து கொடுப்பார்கள் .அதை வைத்து தான் எங்கள் கிராமமே வாழ்ந்து வந்தது .

பலநாட்கள் நமக்கு இந்த கூலி தரமாட்டேன் என்கிறார்களே !என்கிற வருத்தம் என்னுள்ளே இருந்து கொண்டே இருந்த்தது முதலாளியிடம் ஒருநாள் ,பெரியவர்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் நானும் தானே செய்கின்றேன் எனக்கு மட்டும் கூலியை ஏன் குறைத்து கொடுக்கிறிர்கள் என்று கேட்டு விட்டேன் ,பலன் ................................
நெல்லை கொண்டு தொட்டியில் கொட்டுகிறோம் இல்லையா அதை இரவு முழுவதும் அரைத்து அரிசியாக்கி விடுவார்கள் !!தொட்டியில் கொட்டிய நெல்லை இருவர் இரவு முழுவதும் தள்ளி கொண்டே இருக்க வேண்டும் ,அப்போது தான் அரைக்கும் .அவர்களுக்கு மட்டும் குடுதலாக ஒரு ரூபாயை கொடுப்பார்கள் .
அந்த வேலை மிக மிக கொடுமையானது ,இரவு முழுவதும் நெல்லை தள்ளுவதால் அந்த நெல்லு சொனை உடம்பு பூறா பரவி நிறந்தர அரிப்பையும் ,சொறியையும் ,மூக்கு வழியாக ஏறி நிறந்ததர ஆஸ்துமாவையும் பரிசாக அளிக்கும் ,அதனால் யாரும் அந்த வேலைக்கு போகமாட்டார்கள் .

எனக்கு அந்த வேலையை கொடுத்து ,இருவருக்கு பதில் என்னைமட்டும் நியமித்து ,மற்றவர்களுக்கு மூன்று ரூபாய் கொடுத்ததற்கு பதில் எனக்கு ஒரு ரூபாய் அளித்து வேலையை வாங்கி கொண்டார்கள்

எங்கள் குடும்ப சூழ்நிலை ஒரு ரூபாய் கூடுதலாக. கிடைக்கிறதே என்று தினமும் படாத பாடுபட்டேன் .அந்த கொடுமையை வீட்டில் சொல்லி பலநாள் புலம்பினேன் ,அம்மா வந்து மில் முதலாளியிடம் கேட்டபோது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்து தருகிறோம் அந்த வேலையை செய்ய சொல்லுங்கள் இல்லை என்றால் அவரை வேலையில் இருந்தது நின்றுகொள்ள சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள் .அம்மா என்னிடம் வந்து பொறுத்துக்கொண்டு செய்யுப்பா!! என்ன செய்யுறது !!என சொல்லிவிட்டார்கள் ,பிறகு என் கஸ்ட்டம் என்னோடு என்று அந்த வேலையை தொடர்ந்தேன் .விளைவு ........................................................... 

பள்ளியில் ஆரம்பித்த அந்த வேலை கல்லூரி படிக்கும் வரை தொடர்ந்ததது ,குடும்ப வறுமையும் ஒழிந்த பாடில்லை ,இதில் என் படிப்பு செலவுக்கு ,தம்பி தங்கைகளின் படிப்பு செலவுக்கு என்று அம்மா 10 பைசா வட்டிக்கு பணம் வாங்கி கடன் வேறு சேர்ந்து கொண்டது .அந்த வறுமையை வறுமை அடைய வழி தெரியாமல் தவித்து போய்விட்டோம் .
விடுமுறை நாள் என்றால் தான் மில்லுக்கு வேலைக்கு போக முடியும் ,மற்ற நாட்களில் போக முடியாது ,என்ன செய்வது என்று யோசித்தேன் ,எனக்கு கணக்கு பாடம் அருமையாக வரும் ,கல்லூரிக்கு போகும் போதே காலை மாலை நேரங்களில் சில டுடோரியல் கல்லூரிகளுக்கு சென்று பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன் ,அவர்களும் உழைப்பை சுரண்டினார்களே தவிர உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரவில்லை .
பார்த்தேன் ,நானே "அன்பு கணித பயிலகம் " தொடங்கினேன் .ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு 20 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்தேன் ஆரம்பத்தில் குறைந்த மாணவர்களே வந்தார்கள் .விளம்பரபடுத்தினேன் மாணவர்கள் குவிந்தார்கள் ,சேர்ந்த அத்தனை பேரையும் தேர்ச்சி அடையவைத்தேன் ,அதற்க்கு பல வித்தியாசமான வழிகளை கடைபிடித்தேன் .
வறுமை மெல்ல அகல ஆரம்பித்தது ,முதலில் என் வருமானத்தை கொண்டு ஒழுகி கொண்டிருந்தத வீட்டை கீற்று ,கழி என அனைத்தும் புதிதாக வாங்கி கட்டி முடித்து அந்த வீட்டில் உட்கார்ந்த மகிழ்ச்சி ,நான் தற்போது கட்டிருக்கும் மாடி வீட்டில் குடியேறிய போது கூட எனக்கு கிடைக்கவில்லை .






 

No comments:

Post a Comment