Sunday, 23 October 2016

இந்தியா எப்போது விடியல் உனக்கு ???
ஆங்கிலேயன் போனதால் விடிந்து விட்டாயா ???இந்திய மக்கள் பசி பட்டினி விடிந்துவிட்டாதாம்மா ???
ஊருக்குள் நாத்து நட தண்ணி இங்கே இல்லையம்மா ????
படிக்கும் பாலகன் தண்ணி போட கடைகள் இங்கே பலவும் உண்டு ....
படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரி கழுத்து மாலை அறுக்குறான்....
படித்துவிட்டு பதிவு செஞ்சா .......
கொள்ளைகார அரசியல்வாதி பல இலட்சம் கேக்குறான் .....
இந்தியா எப்போது விடியல் உனக்கு ????

ஆயிரம் உண்டு இங்கு சாதி... சாதிக்கு ஒரு கட்சி உண்டு .......
சாதித்தது என்னவென்று சான்றொப்பம் இல்லை இங்கு .....
சாதிக்கு சாதி வெட்டுவான் ...
சாதி தலைவனெல்லாம் ஓன்று சேர்ந்து சமாதிக்கு வளையம் (மலர் ) வைப்பான் ....
முட்டா சாதிமக்க தலைவனுக்கு கட்சி நடத்த கோவணத்தை அவுத்து கொடுப்பான் ....
சாதி ஒழிக்க கட்சின்னு துவங்கிடுவான் .....
கட்சி வளக்க சாதியைதான் வளத்துடுவான்...
இந்தியா எப்போது விடியல் உனக்கு ???????
பெண் உரிமை மேடையிலே பேசிடுவான் .....
பெண் கழுத்து அறுப்பவனுக்கு சாதி சொல்லி அடைகாப்பான் .....
இடஒதுக்கிடு வேண்டி இங்கே போராடுவான்.....
மேலே போனவுடன் தன் சாதிக்காரனையே கீழே தள்ளி மிதித்திடுவான்........
பெண் ஆடை குறைத்து திரையிலே ஆடவைப்பான் .....
அரசு அங்கீகாரம் உண்டென்று அலறியும் வைப்பான் ......ஆனால்
ஆணுக்கு பெண் இங்கே சமம் என்று ஏகடியம் செய்து வைப்பான் ......
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????
அண்ணல் காந்தி அம்பேத்கர் வழி என்பான் ....
மதம் பிடித்து ஆட்சி செய்து ஒட்டு பொறுக்குவான் ......
மத சார்பற்ற நாடுன்னு ஏட்டினிலே எழுதி நக்குவான் ........
ஆட்சி நடத்த புது கோட்டைன்னு கட்டிவைப்பான் ஒருத்தன் ......
கோட்டை இல்லை ........ஏழைக்கு
தரம் வாய்ந்த பல நோக்கு மருத்துவ மனைன்னு மற்றொருவன் மார்தட்டுவான் ......
அவனுக்கு மார்சளின்ன அப்போலோ நாடிடுவான் .......
ஏமாந்த ஏழை இங்கே ....அப்பல்லோ அவனுக்கு எப்போங்க ??????
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????

Saturday, 22 October 2016

இந்தியா எப்போது விடியல் உனக்கு ???

ஆங்கிலேயன் போனதால் விடிந்து விட்டாயா ???
இந்திய மக்கள் பசி பட்டினி விடிந்துவிட்டாதாம்மா ???
ஊருக்குள் நாத்து நட தண்ணி இங்கே இல்லையம்மா ????
படிக்கும் பாலகன் தண்ணி போட கடைகள் இங்கே பலவும் உண்டு ....
படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரி கழுத்து மாலை அறுக்குறான்....
படித்துவிட்டு பதிவு செஞ்சா .......
கொள்ளைகார அரசியல்வாதி பல இலட்சம் கேக்குறான் .....
இந்தியா எப்போது விடியல் உனக்கு ????

ஆயிரம் உண்டு இங்கு சாதி... சாதிக்கு ஒரு கட்சி உண்டு .......
சாதித்தது என்னவென்று சான்றொப்பம் இல்லை இங்கு .....
சாதிக்கு சாதி வெட்டுவான் ...
சாதி தலைவனெல்லாம் ஓன்று சேர்ந்து சமாதிக்கு வளையம் (மலர் ) வைப்பான் ....
முட்டா சாதிமக்க தலைவனுக்கு கட்சி நடத்த கோவணத்தை அவுத்து கொடுப்பான் ....
சாதி ஒழிக்க கட்சின்னு துவங்கிடுவான் .....
கட்சி வளக்க சாதியைதான் வளத்துடுவான்...
இந்தியா எப்போது விடியல் உனக்கு ???????
பெண் உரிமை மேடையிலே பேசிடுவான் .....
பெண் கழுத்து அறுப்பவனுக்கு சாதி சொல்லி அடைகாப்பான் .....
இடஒதுக்கிடு வேண்டி இங்கே போராடுவான்.....
மேலே போனவுடன் தன் சாதிக்காரனையே கீழே தள்ளி மிதித்திடுவான்........
பெண் ஆடை குறைத்து திரையிலே ஆடவைப்பான் .....
அரசு அங்கீகாரம் உண்டென்று அலறியும் வைப்பான் ......ஆனால்
ஆணுக்கு பெண் இங்கே சமம் என்று ஏகடியம் செய்து வைப்பான் ......
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????
அண்ணல் காந்தி அம்பேத்கர் வழி என்பான் ....
மதம் பிடித்து ஆட்சி செய்து ஒட்டு பொறுக்குவான் ......
மத சார்பற்ற நாடுன்னு ஏட்டினிலே எழுதி நக்குவான் ........
ஆட்சி நடத்த புது கோட்டைன்னு கட்டிவைப்பான் ஒருத்தன் ......
கோட்டை இல்லை ........ஏழைக்கு
தரம் வாய்ந்த பல நோக்கு மருத்துவ மனைன்னு மற்றொருவன் மார்தட்டுவான் ......
அவனுக்கு மார்சளின்ன அப்போலோ நாடிடுவான் .......
ஏமாந்த ஏழை இங்கே ....அப்பல்லோ அவனுக்கு எப்போங்க ??????
இந்தியா எப்போது விடியல் உனக்கு ??????

Saturday, 14 April 2012

62 ஆண்டுகால பல்கலைகழகத்தின் நிதிநிலை

62 ஆண்டுகால பல்கலைகழகத்தின் நிதிநிலை 

இது அண்ணாமலை பல்கலை கழகத்தின் நிதிநிலை அறிக்கை ,இதை படிக்கின்ற சகோதரர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பதிய வேண்டுகின்றேன் !!

Friday, 28 October 2011

செய்யாத தவறுக்கு தண்டனை

 செய்யாத தவறுக்கு தண்டனை 
வீட்டில் அப்போதெல்லாம் வறுமை கொடுமையாக தாண்டவம் ஆடும் .ஒரு பைசாவுக்கு கூட அப்போது மதிப்பு உண்டு ,ஒரு பைசாவுக்கு மணிலா கேக் தருவார்கள் ,ஆனால் ஒரு பைசா தரத்தான் ஆள் இருக்காது .அம்மா வைத்திருக்கும் காசுகளை அவ்வப்போது தெரியாமல் எடுத்துகொண்டு கேக் வாங்கி சாப்பிடுவது வழக்கம் ,அதிகபட்சம் இரண்டு பைசா எடுப்பேன் அவ்வளவுதான் .அதற்க்கு மேல் அப்போது எனக்கு செலவழிக்க கூட தெரியாது ,

இந்த நிலையில் ,அம்மாவுக்கு அவ்வப்போது தெரிந்து அடிவாங்குவதும் சகஜம் ஆகிப்போனது .
ஒருநாள் கடைக்கு சமான் வாங்க சொல்லி காசு கொடுத்தார்கள் ,சமான் வாங்கிகொண்டு மீதம் அவன் 25 பைசா மீதி கொடுத்தான் ,அதை வாங்கி மேல் சட்டைப்பையில் போட்டுகொண்டு வீட்டுக்கு வந்தேன் .சாமானை கொடுத்து விட்டு மீதி காசுவை பையில் பார்த்தால் காசை காணவில்லை ,பை ஓட்டையாக இருந்தததால் விழுந்து விட்டிருக்கிறது ,அம்மாவிடம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை ,நான் அவ்வளவுக்கும் வாங்கி தின்றுவிட்டேன் என்று உறுதியாக நினைத்து விட்டார்கள் ,அப்பா வேறு விசாரிக்கிறார் ,நான் மீண்டும் மீண்டும் கிழே விழுந்து விட்டது என்று எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை .அப்பாவும் அம்மாவும் என்னை செம அடி அடிக்கிறார்கள் ,அவர்கள் கஷ்ட்டம் அவர்களுக்கு ,எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை .

அடி கண் மண் தெரியாமல் விழுகிறது ,நான் பலமாக வாந்தி எடுத்து ,மயங்கி விழுந்து விட்டேன் ,அவ்வளவு பலமான அடி .
உடனே அப்பாவும் அம்மாவும் என்னை தூக்கி கொண்டு மருத்துவ மனைக்கு சென்று ,நிறைய செலவு செய்ய வேண்டியதாகி விட்டது ,வரும் வழிஎல்லாம் வேறு திட்டிக்கொண்டே வருகிறார்கள் .
என்னை மருந்து கொடுத்து படுக்க வைத்து விட்டு ,அம்மா வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைக்கிறார்கள்
நான் சட்டையில் போட்ட காசு ஓட்டை வழியாக கிழே விழாமல் நான் சாமான் வாங்கிய பையில் விழுந்த்திருந்த்தது ,இன்று வரை என் அம்மா அந்த செயலை சொல்லி சொல்லி வருத்தப்படுவார்கள் !!

மிகவும் எனக்கு ஆச்சிரியத்தையும் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதும் ஒன்றாக என் வாழ்வில் அமைந்து விட்டது

வறுமை

வறுமை

என் சிறுவயதில் நான் அனுபவித்த வறுமையை யாருமே அனுபவிக்க கூடாது என்று என் மனதுக்குள் இன்றும் அழுகின்றேன் ஐயா !!
என் தந்தையர் கலப்புமணம் செய்துகொண்டவர் !அதை விட என் தாத்தா பாட்டியின் கதை வேறுவிதமாக இருக்கும் !அது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கின்றேன் !!
என் பாட்டி தன் கணவரை பிரிந்து என் அப்பாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார்கள் !!
என் அப்பா வேறு சாதியை சேர்ந்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்கள் ,ஆகையால் குடும்ப வழிகளில் பெரிய ஆதரவுக்கு யாரும் இல்லை .
அண்ணாமலை பல்கலைகழகத்தில் உணவு பரிமாறுபவராக இருந்தார்கள் ,மிக மிக குறைவான சம்பளம் தான் தருவார்கள் ,அதை வைத்து இருவர் கூட மூன்று வேளை சாப்பிட முடியாது ,அவ்வளவு வறுமை ,ஆனால் நாங்கள் தம்பி மூன்று பேர் தங்கை ஐந்து பேர் பாட்டி ,அம்மா மொத்தம் 11 பேர் சாப்பிட வேண்டும் .நிலைமையை யோசித்து பாருங்கள் ஆனால் வாழ்ந்தோம் ,அது தான் வாழ்க்கை ................................ 
எங்கள் வாழ்க்கை எப்படி ஓடியது என்றால் ,பல்கலை கழக விடுதியில் வேலை பார்த்த என் தந்தையார் அங்கே மாணவர்கள் சாப்பிட்டது போக மீந்து இருக்கும் சாப்பாட்டை எடுத்து வருவார்கள் !அதுவும் சட்டப்படி எடுத்துபோக கூடாது ,விடுதிக்கு பின்புறம் மேயும் பன்றிகளுக்கு தான் கொட்ட வேண்டுமாம் !அதை தெரியாமல் வயிற்றில் கட்டி எடுத்து வருவார்கள் அதுதான் எங்களுக்கு சாப்பாடே !நாங்கள் எல்லோரும் பள்ளிக்கு கட்டாயம் போகவேண்டும் இந்த கஷ்டத்தில் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கின்றிர்களா!!அது தான் தாயை தெய்வம் என்று சொல்கிறோமே அந்த தெய்வத்தின் பிடிவாதம் !எங்கள் தெருவிலேயே நான் தான் முதல் பட்டதாரி என்றால் எங்கள் தெய்வத்தின் செயல் பாட்டை நினைத்து பாருங்கள் !!இரவு அப்பா எடுத்து வரும் [வேலை முடிந்து 11 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவார் ,சில நாட்கள் 12 மணிக்கு மேல் கூட ஆகிவிடும் .]சாப்பாடு மறுநாள் காலையில் சாப்பிடுவோம் ,சாப்பிட்டு பள்ளிக்கு சென்றால் மதியம் சாப்பாட்டுக்கு 3 கிலோமீட்டருக்கு மேல் நடந்து வந்து தான் சாப்பிட வேண்டும் ,நடந்து அல்ல ஒரு மணிக்கு பள்ளி விட்டால் ஓடிவருவோம் !சாப்பிட்டு விட்டு மீண்டும் ஓடுவோம் அப்போது தான் பள்ளிக்கு இரண்டுமணிக்கு செல்லமுடியும் ,இடையில் நாவல் பழம் பறிக்க முடியும் .

தினமும் இப்படி தான் வாழ்க்கை போகும் !அப்பா வெறும் சாப்பாடு ,தோசை ,இட்லி ,பூரி இப்படி வகை வகையாக எடுத்து வருவார் ஆனால் எனக்கு தெரிந்து அவைகளுக்கு தொட்டுக்க வைத்து நான் சாப்பிட்டது மிகமிக குறைவு !!வறுமை அப்படி !!வெறும் சோறை தண்ணிர் விட்டு வெங்காயம் தொட்டு தான் சாப்பிடுவோம் !!
இதை விட கொடுமை அப்பாவிடம் இருந்த ஒரு மோசமான கெட்ட பழக்கம் சூதாட்டம் !!!
சம்பளம் வாங்கி கொண்டு சூதாட கிளம்பி விடுவார் அப்போது எங்களுக்கு சாப்பாடு ............................................................................ கொடுமை சார் அது !!
கண்ணீர் வந்ததால் மன்னித்து கொள்ளுங்கள் .............. 

அம்மாவுக்கு இந்த வறுமையை ஓட்ட கண்டுபிடித்த வழிதான் இட்லி சுட்டு விக்கிறது ,ஆடு மாடுகள் வளர்ப்பது ,படித்துக்கொண்டே இந்த வேலைகளுக்கு உதவி செய்வது இருக்கிறதே !!மிக கொடுமை அது !!காலையில் எழுந்த்தவுடன் அம்மா பாலை கறப்பார்கள் அதை எடுத்துக்கொண்டு வீடு வீடாக கொடுக்க வேண்டும் ,அவைகளுக்கு கழனிநீர் வைக்க வீடு வீடாக சென்று எடுத்து வரவேண்டும் அதற்க்கு ஈடாக சாணத்தை அவர்கள் வீட்டுக்கு கொண்டு கொடுக்க வேண்டும் ,வீட்டில் மீந்து இருக்கும் சாணத்தையும் இன்னும் பல்வேறு இடங்களில் இருந்து பொருக்கி வரும் சானங்களையும் வரட்டி தட்ட அம்மாவுக்கு உதவி புரிய வேண்டும் ,
காலையில் அவிழ்த்து விடும் மாடுகள் மாலையில் தானாக விட்டுக்கு வந்து விடும் .
சில நேரம் அந்த மாடுகள் வீடு வாராமல் காணாமல் போகிவிடும் ,அப்போது வீடு படுகின்றபாடு சொல்லி மாளாது !!......................ஆனால் அதையும் சொல்கின்றேன் !!
காணமல் போன மாட்டை கண்டு பிடிக்க வீட்டில் உள்ள எல்லோரையும் ,வீட்டை விட்டு விரட்டிவிடுவார் அம்மா !!
அந்த மாடு எவர் வீட்டு வயலிலாவது மேய்ந்து இருக்கும் வயல் சொந்தக்காரர் மாட்டை பிடித்து கொண்டுபோய் எதாவது ஒருகிராமத்தில் வீட்டு தோட்டத்தில் கட்டி போட்டு இருப்பார் அதை கண்டு பிடிப்பது சிபிஐ வேலையை விட கடினமானது ,பல நேரம் கண்டுபிடித்து விடுவோம் ,சிலநேரம் கண்டுபிடிக்க முடியாது ,அப்போதெல்லாம் அம்மாவின் அழுகை என் கண்ணில் இன்றும் நிழலாடுகிறது !!
இந்த வருமானம் ஒட்டு மொத்தமாக அதில் போகிவிடும் ,பல வருட உழைப்பு சிலமணி நேரத்தில் அழிந்து விடும் .இருந்தததோ ஒரு சிறு ஓலை குடிசை வீடு ,அதை கூட பலவருடங்கள் ஓலை கூட மாற்ற முடியாது ,மழைக்காலங்கள் வந்தால் நாங்கள் படுகின்ற கொடுமை சொல்லி மாளாது !!
ஆம் !தோழர் பெய்கின்ற மழை எல்லாம் எங்கள் வீட்டின் உள்ளே தான் பேயும் வீட்டின் உள்ளே வாய்க்கால் வெட்டி தண்ணிரை வெளியேற்றுவோம் மீதி இருக்கும் இடத்தில் எங்கள் தங்கைகளை படுக்க வைத்திருப்போம் ,தம்பிகளை பக்கத்து வீடுகளுக்கு அனுப்பிவிடுவோம் !!எனக்கு வினவு தெரியும் வரை இதுதான் ஐயா!!நடந்தது,
என் மனதில் அப்போது ஓடியதுஎல்லாம் ஒழுகாத வீட்டில் குடி இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை .
அந்த மழை காலங்களில் தங்கைகளை தூங்க வைத்துவிட்டு நானும் என் அம்மாவும் இரவு முழுதும் அழுத அழுகை என் வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது !!
அதனால் தான் குடிசை வீடுகள் அனைத்தும் ஒட்டு வீடுகளாக மாற்றும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் ,நானும் ஒரு ஒழுகாத வீடு கட்டினேன் ...........................
ஆடையே இல்லாத கணவனைபோலும் ,கூறைகுடிலில் வாழும் மனைவிபோலும் தான் எங்கள் வாழ்க்கையும் ,தீபாவளி வந்துவிட்டால் ,அம்மா படும் வேதனை சொல்லி மாளாது ஐயா!!
நாங்கள் தீபாவளிக்கு மட்டும் தான் புது துணியை பார்க்க முடியும் ,அதுவும் இருப்பதிலேயே மிக குறைந்த்த விலை துணிதான் எடுப்பார்கள் ,அதுவும் அப்பாவுக்கு அலுவலகத்தில் கூட்டுறவு துணிக்கடையில் கடன் கொடுப்பார்கள் அந்த துணிதான் ,வெடி எல்லாம் மற்றவர்கள் வெடித்து போட்ட மீதி தான் .
சில நேரம் அப்பாவுக்கு எதாவது பணம் மாணவர்களிடம் வசூலித்து தருவார்கள் ,அப்பா அதை எடுத்துக்கொண்டு சூதாட கிளம்பிவிடுவார்கள் ,அவரை தேடி நானும் அம்மாவும் ஒவ்வொரு கிளப்பாக தேடி அலைவோம் ,கிடைக்க மாட்டார்கள் ,கிடைத்தாலும் சூதாட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு ஜெஜ்ஜிக்கிட்டு வரேன் போங்க என்று விரட்டுவார் ,அம்மா அழுதுகொண்டே வருவார் ,பலநேரம் அவர் தாலி தான் எங்களுக்கு தீபாவளி கொண்ட்டாடும்.
அவ்வளவு கொடுமைகள் அனுபவித்தாலும் ,அந்த பாசம் எங்களை கட்டிபோட்டு விடும் ஐயா !!
அப்பா பல நேரம் என்னிடம் அழுவார் இந்த பாழாய்ப்போன பழக்கம் என்னை விடாமல் குடும்பத்தை அழிக்கிறதே என்று அழுவார் .
இதை விட கொடுமை ஒன்னு இருக்கு ,வருடத்தில் இரண்டுமாதம் கல்லூரி மூடிவிடுவார்கள் ,அப்போது அப்பா சாப்பாடு எடுத்து வரமுடியாது ,அப்போது எல்லாம் பலநேரம் நாங்கள் பட்டிநிகிடந்த்தே பழகிவிட்டோம் ,எங்கள் வீட்டுக்கு எதிரில் ஒரு அரவை மில் இருக்கும் ,அப்போது எங்களுக்கு விடுமுறையில் நான் அந்த மில்லுக்கு வேலைக்கு போவேன் ,கூலி என்ன தெரியுமா ?
அரைத்து மீந்துபோன குருணை தான் ஐயா !!இப்போதெல்லாம் ரேசன் அரிசியை கூட மக்கள் பலர் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள் ,அந்த குருணையை கோழிக்கு வைத்தால் கூட சாப்பிடாது ஐயா !அவ்வளவு கல் இருக்கும் அதை வாங்கிகொண்டு வந்தது சுத்தப்படுத்தி கஞ்சி தான் காச்சி குடிப்போம்.
அந்த குருணையை வாங்க செய்ய வேண்டிய வேலை இருக்கிறதே !!ஐயோ !!.......................................... 

காலை 8 மணிக்கு எல்லாம் அந்த மில்லில் இருக்க வேண்டும் அதுவும் எல்லோருக்கும் வேலை இருக்காது குறிப்பிட்ட சிலரைத்தான் தேர்வு செய்வார்கள் ,அதில் நாமும் ஒருவராக இருந்தால் நமக்கு அதிஷ்டமே!!

அப்படி உள்ளே போனால் 500 முட்டைகளுக்கு மேல் நெல்லை வெவித்து முட்டு முட்டாக கொட்டி வைத்திருப்பார்கள் ,அவைகளை முறத்தால் பரப்பி .பல்பலகை போட்டு ,காலால் கிண்டி ,பிறகு முறத்தால் கிளறி அடிக்கிற வெயில் அனைத்தும் நாள் முழுவதும் நம்மேல் தான் ,அவைகளை காயவைத்து ,மூட்டையில் அள்ளி அரவை பெட்டியில் கொட்டி ,மறுநாள் வெவியலுக்கு பதரை அள்ளி கொட்டி விட்டு அவைகளின் கறிகளை சுத்தப்படுத்தி ,கூலியை வாங்க இரவு 10 மணியாகி விடும் ,நாங்கள் சின்ன பையன் என்பதால் 2 படி குருணை மட்டும் தான் ,பெரியவர்களுக்கு 2 ரூபாய் கூலி சேர்த்து கொடுப்பார்கள் .அதை வைத்து தான் எங்கள் கிராமமே வாழ்ந்து வந்தது .

பலநாட்கள் நமக்கு இந்த கூலி தரமாட்டேன் என்கிறார்களே !என்கிற வருத்தம் என்னுள்ளே இருந்து கொண்டே இருந்த்தது முதலாளியிடம் ஒருநாள் ,பெரியவர்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் நானும் தானே செய்கின்றேன் எனக்கு மட்டும் கூலியை ஏன் குறைத்து கொடுக்கிறிர்கள் என்று கேட்டு விட்டேன் ,பலன் ................................
நெல்லை கொண்டு தொட்டியில் கொட்டுகிறோம் இல்லையா அதை இரவு முழுவதும் அரைத்து அரிசியாக்கி விடுவார்கள் !!தொட்டியில் கொட்டிய நெல்லை இருவர் இரவு முழுவதும் தள்ளி கொண்டே இருக்க வேண்டும் ,அப்போது தான் அரைக்கும் .அவர்களுக்கு மட்டும் குடுதலாக ஒரு ரூபாயை கொடுப்பார்கள் .
அந்த வேலை மிக மிக கொடுமையானது ,இரவு முழுவதும் நெல்லை தள்ளுவதால் அந்த நெல்லு சொனை உடம்பு பூறா பரவி நிறந்தர அரிப்பையும் ,சொறியையும் ,மூக்கு வழியாக ஏறி நிறந்ததர ஆஸ்துமாவையும் பரிசாக அளிக்கும் ,அதனால் யாரும் அந்த வேலைக்கு போகமாட்டார்கள் .

எனக்கு அந்த வேலையை கொடுத்து ,இருவருக்கு பதில் என்னைமட்டும் நியமித்து ,மற்றவர்களுக்கு மூன்று ரூபாய் கொடுத்ததற்கு பதில் எனக்கு ஒரு ரூபாய் அளித்து வேலையை வாங்கி கொண்டார்கள்

எங்கள் குடும்ப சூழ்நிலை ஒரு ரூபாய் கூடுதலாக. கிடைக்கிறதே என்று தினமும் படாத பாடுபட்டேன் .அந்த கொடுமையை வீட்டில் சொல்லி பலநாள் புலம்பினேன் ,அம்மா வந்து மில் முதலாளியிடம் கேட்டபோது இன்னும் ஒரு ரூபாய் சேர்த்து தருகிறோம் அந்த வேலையை செய்ய சொல்லுங்கள் இல்லை என்றால் அவரை வேலையில் இருந்தது நின்றுகொள்ள சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள் .அம்மா என்னிடம் வந்து பொறுத்துக்கொண்டு செய்யுப்பா!! என்ன செய்யுறது !!என சொல்லிவிட்டார்கள் ,பிறகு என் கஸ்ட்டம் என்னோடு என்று அந்த வேலையை தொடர்ந்தேன் .விளைவு ........................................................... 

பள்ளியில் ஆரம்பித்த அந்த வேலை கல்லூரி படிக்கும் வரை தொடர்ந்ததது ,குடும்ப வறுமையும் ஒழிந்த பாடில்லை ,இதில் என் படிப்பு செலவுக்கு ,தம்பி தங்கைகளின் படிப்பு செலவுக்கு என்று அம்மா 10 பைசா வட்டிக்கு பணம் வாங்கி கடன் வேறு சேர்ந்து கொண்டது .அந்த வறுமையை வறுமை அடைய வழி தெரியாமல் தவித்து போய்விட்டோம் .
விடுமுறை நாள் என்றால் தான் மில்லுக்கு வேலைக்கு போக முடியும் ,மற்ற நாட்களில் போக முடியாது ,என்ன செய்வது என்று யோசித்தேன் ,எனக்கு கணக்கு பாடம் அருமையாக வரும் ,கல்லூரிக்கு போகும் போதே காலை மாலை நேரங்களில் சில டுடோரியல் கல்லூரிகளுக்கு சென்று பகுதி நேர ஆசிரியராக பணியாற்றினேன் ,அவர்களும் உழைப்பை சுரண்டினார்களே தவிர உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தரவில்லை .
பார்த்தேன் ,நானே "அன்பு கணித பயிலகம் " தொடங்கினேன் .ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு 20 ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்தேன் ஆரம்பத்தில் குறைந்த மாணவர்களே வந்தார்கள் .விளம்பரபடுத்தினேன் மாணவர்கள் குவிந்தார்கள் ,சேர்ந்த அத்தனை பேரையும் தேர்ச்சி அடையவைத்தேன் ,அதற்க்கு பல வித்தியாசமான வழிகளை கடைபிடித்தேன் .
வறுமை மெல்ல அகல ஆரம்பித்தது ,முதலில் என் வருமானத்தை கொண்டு ஒழுகி கொண்டிருந்தத வீட்டை கீற்று ,கழி என அனைத்தும் புதிதாக வாங்கி கட்டி முடித்து அந்த வீட்டில் உட்கார்ந்த மகிழ்ச்சி ,நான் தற்போது கட்டிருக்கும் மாடி வீட்டில் குடியேறிய போது கூட எனக்கு கிடைக்கவில்லை .






 

மரணத்திற்கு பின் .................

அனைத்து ஆன்மிக கருத்துக்களும் ,மதங்களும் மனிதனின் மரண பயத்தை தன் பலமாக எடுத்துக்கொண்டு பல்வேறு மூட நம்பிக்கைகளை பரப்புகின்றன .எல்லா மதங்களும் கிட்ட தட்ட சுவர்க்கம் ,நரகம் ,மறுபிறவி என்று உண்மையில்லாத விவரங்களை கூறிமக்களை நெறிபடுத்த முயல்கின்றன அல்லது மதத்தின் மூட நம்பிக்கைகளை நம்பவைக்க பயன்படுத்துகின்றன .
இல்லாத ஒன்றை அல்லது உணரவே முடியாத ஒன்றை இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவது மிக பெரிய மோசடி குற்றமாகும் . மதங்கள் வலியுறுத்துகின்ற ஜீவாத்மா ,பரமாத்மா என்ற கருத்துக்களும் விவாதத்திற்கு உரியவை . ஒன்றும் இல்லாததிலிருந்த்துதான் அனைத்தும் உருவாயிற்று இந்த ஒன்றும் இல்லாததுதான் பரமாத்மா என்றும் மதங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இவைகள் அறிவியல் பூர்வ கருத்துக்களோடும் இயல்பு நிலையிலும் ஏற்றுக்கொள்ள கூடிய பொருள்கள் .ஆனால் மனிதனின் மரணத்திற்கு பின் ஆன்மா என்ற ஓன்று வெளியேறி ,தான் பெற்ற பாவ, புண்ணிய காரணங்களுக்கு ஏற்ப பரமாத்மா ,சொர்க்கம் ,நரகம் ஆவி ,மறுபிறவி அடைகின்றன என்பது ஏற்க முடியாத கருத்துக்கள் .
அதாவது மதங்களின் கோட்பாட்டுப்படி இருக்கின்ற ஆன்மாக்கள் தான் மீண்டும் பிறக்கின்றன என்று ஏற்றுக்கொண்டால் முப்பது கோடி மக்கள் தொகையாக இருந்த இந்தியாவில் 125 கோடியாக மக்கள் தொகை பல்கி பெறுக எது காரணம் ?ஆன்மாக்கள் இரண்டாக பிரியும் தன்மை வாய்ந்ததா ?இன்னும் சொல்லபோனால் ஒரு மனிதனிடம் இருந்து ஒரு முறை வெளியேறும் ஆரோக்கியமான விந்திலிருந்த்து பல லட்சம் குழந்தைகளை உருவாக்க முடியும் ..அறிவியல் தகுந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் இந்த பல லட்சம் குழந்தைகளையும் உருவாக்க முடியும் .இதை உலகம் முழுவதும் நடைமுறை படுத்தினால் நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது .பல கோடி கோடி மக்களை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ள முடியும் இன்னும் உயிரியல் படிப்பின்படி செல்கள் இருந்தாலே குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியும் .
அதே போல் இன்றைய உலகில் மனிதன் நினைத்தால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் .வேண்டாம் என்றால் தவிர்க்க முடியும் .அப்போது பிறப்பு என்பதற்கும் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்புள்ளது என்று கூறுகிற ஆன்மீக கருத்துக்கள் தவறானவை ஆகும் .இன்னும் சில மதவாதிகள் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் ஏன் நல்ல குழந்தைகளாக பிறப்பதில்லை .கூன்,குருடாக பிறக்கின்றன ,இதற்க்கெல்லாம் இறைவன் தான் காரணம் என்கிறார்கள் .
கர்பமான தாய் கர்ப்பமான முதல் முன்று மாதங்கள் தலைவலி மாத்திரை உண்டாலும் ,கர்ப்பத்தடை மாத்திரை உண்டாலும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி குறையுடன் தான் பிறப்பார்கள் .இதில் கடவுளாக தாய்யல்லவா காட்சி தருகிறாள் .எனவே இதிலும் கடவுள் எங்கே வந்தார் .எனவே இயல்பாக எதிபாராமல் நடக்கின்ற நிகழ்சிகளுக்கு எல்லாம் கடவுள் காரணம் என்று கூறுவது அறிவுக்கு ஏற்றதன்று .
ஆனாலும் மரணத்தை பற்றிய தெளிவு நம்மில் பலருக்கு இருப்பதில்லை ,மரணத்தை துணிவோடு ஏற்றுகொள்கின்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் ,இறைவன் பற்றிய அறிவுக்கு ஏற்பில்லாத கருத்துக்களை கூறும்போது கேள்வி கேட்க மனம் துணியும் ,தெளியும் .ஆனால் நாம் மரண பயத்தை மனதிலே சுமந்து கொண்டு சாகாத பிணமாக வலம் வருவதால் அறிவுப்பூர்வமான கருத்துக்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை .2000 ஆண்டுகளுக்கு முன்பே நமது பாட்டன் திருவள்ளுவன் எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்தித்திருக்கின்றான் பாருங்கள் , "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு !"
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு "
நாம் தூங்கும் போது நாம் உயிரோடு இருக்கின்றோம் நம் நினைவுகள் ,ஆன்மா என கூறப்படுவன அனைத்தும் இருப்பதில்லை .நமது மூளை முற்றிலும் செயல் இழந்துவிடுகிறது ஆனால் தற்காலிகமானது .அதாவது மூளை தற்காலிகமாக செயல் இழந்துவிட்டால் அல்லது செயலை நிறுத்தி விட்டால் நாம் எந்த நினைவுகளும் இல்லாத மரண நிலையை அடைந்து விடுகின்றோம் .ஆனால் மரணம் என்று ஓன்று நிகழ்ந்து விட்டால் மூளை முற்றிலும் நிரந்தரமாக செயல் இழந்து விடுகிறது . எனவே "மூளை முற்றிலும் செயல் இழந்துவிட்டால் மரணம் ,தற்காலிகமாக செயல் இழந்தால் தூக்கம் " ,இதில் இறைவனுக்கோ ஆன்மாவிர்க்கோ, பரமாத்மாவிர்க்கோ தொடர்பு இல்லை என்பதை உணர்ந்து தெளிவு பெறுவோமாக !! .
எனவே மரண பயத்தை தவிர்த்து வாழும் போது வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக நாமே ஆகுவோம் அதை தான் வள்ளுவன்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் _வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ."
என்று கூறுகிறார் .

Wednesday, 19 October 2011

நீதி தலை கவிழ்ந்து சாகிறது

நீதி தலை கவிழ்ந்து சாகிறது

போலீஸ் விரட்டுகிறது ,காட்சின சாராயத்தை சுடுகாட்டில் போட்டு விட்டு ஓடுகிறது ஒரு கூட்டம்.போலீஸ் விரட்டி விரட்டி பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே ஒருவருடம் தள்ளுகிறது .ஜாமீனில் வெளியே வருகிறான் சாராய மன்னன் மீண்டும் காட்ச்சுகிறான் ,அவனுக்கு துணையாக ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்க தலைவர் .....டையார் ஆதரவாக இருக்கிறார் .அடியாட்களும் ரவுடிகளும் பக்க பலத்துடன் வலம் வருகிறான் .நல்லவர்கள் ஒதுங்குகிறார்கள் ,ரவடி குடித்து விட்டு ஒரு கடையில் வயிறு முட்ட தின்கிறான் ,காசு கேட்ட கடைக்காரனை அங்கேயே வெட்டி சாய்க்கிறான் , சாதி சங்க தலைவரின் ஆதரவுடன் வேறு ஒருவரை போலீசில் ஆஜர் ஆக்கி விட்டு ,ராஜ்ஜியத்தை தொடர்கின்றான் .
பிரச்சாரம் களை கட்டுகிறது ,கலியனுக்கு வாக்கு அளியுங்கள் ,உங்கள் ஜாதி தலைவரின் ஆதரவு பெற்ற கலியனுக்கு வாக்களியுங்கள் !!
உங்கள் ஊரில் இரவுபள்ளியும் ,குளத்தை தூர் எடுத்ததும் ,குடிநீரும் ,சிமெண்ட் சாலைகள் அமைத்துகொடுத்ததுமான விழிப்புணர்வு இயக்க வேட்பாளர் அருளுக்கு வாக்களியுங்கள் !தனி மனித ஒழுக்க வேட்பாளருக்கு வாக்களியுங்கள் !! நல்லவர்களின் குரல் ஒருபுறம் !!
கலியனுக்கு ஆதரவாக சாராயமும் ,ஓட்டுக்கு பணமும் ,ஜாதி ஆதரவாளர்களும் மறுபுறம் !!
முடிவு அறிவிக்க படுகிறது ,கலியன் 30 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெறுகிறான் ,வார்டுக்கு ஜெயித்த மற்ற உறுப்பினர்களை கடத்தி பணம் கொடுத்து பேரூராட்சி தலைவர் ஆகிறான் .
நீதி தலை கவிழ்ந்து சாகிறது .
ஜாதி தலைவன் ஒரு கொலை வழக்கில் மாட்டி செல்வாக்கு இழக்கிறான் ,ஜெயித்த அவன் ஜாதி கலியன் அதிமுக வில் தஞ்சம் அடைகிறான் .
மீண்டும் தேர்தல் ஜாதி தலைவர் ஒரு வார்டுக்கு ஒட்டு கேட்டு வீடு வீடாக வருகிறார் ,அவரை எதிர்த்து அதே கலியன் ,
ஆனால் இந்த தேர்தலில் காணபோனது விழிப்புணர்வு இயக்கம் !!
அதே சாராயம் ,அதே பணம் ஆனால் மக்கள் மனதில் ஊறி இருக்கும் ஜாதி உணர்வு சற்று வேறுபக்கம் திரும்புவது போல் தெரிகிறது !!
தேர்த்தல் முடிவு வரும்போது தான் தெரியும் !!ஜாதியா !!ரவ்டியா !!என்று
ஆனால் தோற்றது விழிப்புணர்வு இல்லை மக்கள் தான் !!

அது சரி அந்த சாராய வியாபாரி என்ன ஆனான் !!அதானே உங்கள் கேள்வி!!
அதான் கதையில் கலியனாக இருக்கிறானே !!இருவரும் ஒருவர் தான் !!

மணிக்கட்டு முறிந்து விட்டது

அதே பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் போதுஇதே நண்பர் ராமமூர்த்தி அவர்கள் ,காலையில் என் உடன் பள்ளிக்கு வந்து விட்டு ,கட் அடித்து விட்டு எங்கோ சென்றுவிட்டார் .என்பக்கத்தில் தான் அவருக்கு இருக்கை. போகும் போது பள்ளி விட்டு வரும்போது புத்தக பையை எடுத்து வர சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . ஆசிரியர் வருகை பதிவு எடுக்கும் போது ராமமூர்த்தி எங்கே எனக்கேட்டார் ,"தெரியவில்லை ஐயா !பையை மட்டும் வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்" என கூறினேன் .அவன் பையை எடுக்க வந்ததால் என்னிடம் கூறு என சொல்லிவிட்டு பாடம் எடுத்தார் .மற்ற வகுப்பு ஆசிரியர்களும் வந்து விட்டு சென்றார்கள் ,ஆனால் ராமமூர்த்தி மட்டும் வரவேயில்லை .மாலை வகுப்பு முடியும் நேரம் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்கிறது ,

நண்பன் புத்தக பையை எடுத்து வர சொல்லி இருக்கிறான் ,ஆசிரியர் பையை அவன் எடுக்க வந்ததால் சொல்ல சொல்லி இருக்கிறார் என்ன செய்வது என்றே தெரியவில்லை ,வகுப்பு எடுத்த ஆசிரியர் சென்று விட்டார் .பள்ளி விடுவதற்க்கான மணி அடிக்க போகிறது ,மனம் ஆசிரியருக்கு தெரியாமல் நண்பனின் பையை எடுத்து கொண்டு செல் என சொல்கிறது ,பயம் வேறு மனதை கவ்வி கொண்டது ,அந்த வகுப்பு ஆசிரியர் மிகவும் கடுமையானவர் ,காதை பிடித்து கிள்ளினார் என்றால் ரத்தம் வந்த பிறகுதான் விடுவார் .

பள்ளி மணி அடித்தது முதல் ஆளாக என்பையையும் நண்பனின் பையையும் எடுத்துகொண்டு வேகமாக ஓடுகிறேன் ........................................அப்போது எல்லாம் வாசல் படி மிக மொத்தமான மரத்தினால் உயரமாக இருக்கும் ,நான் ஓடிய வேகத்தில் அதை கவனிக்காமல் தடுத்து அதன் கிழே இருந்த படிக்கட்டுகளில் பலமாக விழுந்து,என் வலது கையின் மணிக்கட்டு முறிந்து விட்டது ,இன்றும் என் மணிக்கட்டு வளைந்து இருப்பதை பார்க்கும் போது பள்ளி வராமல் கட் அடித்து சென்ற ராமமூர்த்தியும் ,பிறகு அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதும் பிறகு அவனே ரவுடியாகி என்னிடமே மோதி அவனை கையை கட்டி அடித்து இழுத்து வந்தது பிறகு அவன் தூக்கு மாட்டி இறந்து போனது ,அது தனி கதை ,அது பிறகு .............................

நாவல் மரம்

நாவல் மரம் 
பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது,எனது நண்பர் [அப்போது ]ராமமூர்த்தி எங்கள் தெரு நண்பர் ,பள்ளிக்கு ஒன்றாகவே செல்வோம் ,ஒன்றாகவே வருவோம் !மதிய இடைவேளையில் சாப்பிட்டு விட்டு ,பல்கலைகழக விளையாட்டு திடலில் இருக்கும் நாவல் மரத்தில் பழம் பறித்து தின்பது வழக்கம் !அந்த மதிய நேரத்தில் தான் காவலர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் !நாங்கள் மட்டும் அல்ல பள்ளியே அங்கே தான் இருக்கும் !மரத்தில் உச்சில் யார் ஏறுகிறார்களோ அவர்களுக்கு தான் பழம் கிட்டும் .இதில் உச்சியில் ஏறி பறிப்பதில் நான் தான் கெட்டி .

நண்பனை கிழே இருக்க விட்டு மரத்தின் உச்சிகிளையை நோக்கி ஏறிகொண்டிருக்கின்றேன்.மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கிழே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் !ஒற்றை கிளை எந்த பிடிமானமும் இல்லாமல் தனியாக படர்ந்து இருக்கிறது இது வரை யாரும் அந்த கிளைக்கு சென்றதே இல்லை அதனால் நிறைய பழம்!கொத்துகொத்தாய் தொங்குகிறது !உலுக்கினால் கிழே விழுந்து நசுங்கி மண்ணாகி சாப்பிட முடியாது !ஒரு பையை எடுத்துக்கொண்டு ஏறி விட்டேன் பைநெறைய பழம் !கிழே விழுந்ததால் .......................................
40 அடி உயர மரம் ....நினைக்கவே இப்போது பயமாக இருக்கிறது ,ஆனால் அப்போ இளம் கன்று எந்த பயமும் இல்லை !கிழே பார்க்கிறேன் திடிரென மாணவர்கள் சிதறி ஓடுகிறார்கள் !நண்பன் கிழே இருந்தது ,"டேய் !வாட்ச்மேன்டா! "என்று அலற நான் வேகமாக கிளையில் அழுத்தம் கொடுத்து ஏற மள மள என கிளை முறிய ........................................ இதோடு நமது வாழ்க்கை முடிந்ததது என்று எண்ணிவிட்டேன் .மரக்கிளை முறிந்து நாவல் மரத்தின் நாரில் மரக்கிளையும் நானும் தொங்குகின்றோம்.மெதுவாக ஏறி மரத்தின் மற்றொரு மரக்கிளைக்கு வந்த போதுதான் உயிரே வந்தது .அப்போதுதான் தெரிந்து கொண்டேன் நாவல் மரத்தின் கிளையை விட அதன் பட்டை வலுவானது என்று ,பலநாட்கள் நான் மீண்டும் அங்கு செல்லும்போது கிளை இலை எல்லாம் காய்ந்த பிறகும் பட்டையில் அந்த மரக்கிளை நீண்ட நாட்கள் தொங்கி கொண்டு இருந்த்தது .அதை நினைத்தால் இன்றும் அந்த மரப்பட்டை எனக்கு தெய்வமாக தெரியும் .

Saturday, 8 October 2011

நார்த்தம் மிட்டாய்

எனது தந்தையார் அண்ணா மீதும் பெரியார் மீதும் மிகவும் பாசம் கொண்டவர் ,ஒருமுறை அவர்கள் பிறந்தநாளும் என் பிறந்த நாளும் செப்டம்பர் 17  அன்று எங்கள் பள்ளிக்கு மிட்டாய் கொடுக்க வந்தார்கள் ,மாணவர்கள் எல்லோரும் அவரை சூழ்ந்தது கொண்டு மிட்டாய் வைத்திருந்த தட்டை பிடுங்க முயற்சிக்கிறார்கள் .அப்போது அவர் புதிதாக எடுத்து போட்டுக்கொண்டு வந்த சில்க் சிப்பா கிழிந்தது விட்டது ,அப்போதெல்லாம் நார்த்தம் மிட்டாய் என்று கூறுவார்கள்,அதை நினைத்தால் இப்போதும் என் அப்பாவின் அந்த சில்க் சிப்பா எனக்கு நினைவுக்கு வரும் .மேலும் இப்போதுள்ள மோட்டார் வசதிஎல்லாம் அப்போது இல்லை ,பல்கலை கழகத்திற்கு தண்ணிர் எடுக்க ஒரு அடிபைப்பை போட்டு ஒரு வயதானவர் தினமும் காலையில் இருந்தது மாலை வரை பைப்பை அடித்துக்கொண்டே இருப்பார் ,அது ஒரு குழாய் வழியாக பல்கலை கழகத்திற்கு போகும் ,அவரிடம் தினமும் வம்பு வளப்பது மாணவர்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக இருக்கும் ,அவரும் சிரித்துக்கொண்டே எங்களிடம் விளையாடுவார் ஆனால் வேலையில்  கண்ணாக இருப்பார் ,ஒருநாள் அவர் இறந்துவிட மாணவர்கள் அழுத காட்சியும் என் மனதில் நிழலாடுகிறது ,அது போன்ற மனித நேயம் இப்போது குறைந்துள்ளது கவலை அளிப்பதாகவும் உள்ளது . 

Thursday, 6 October 2011

ஐந்தாம் வகுப்பு பள்ளி

அதே ஐந்தாம் வகுப்பு பள்ளியில் பரிசோதனை செய்ய மாவட்டகல்வி அதிகாரி வர இருப்பதாக ஒருநாள் அறிவிப்பு செய்தார்கள் ,நாங்கள் எல்லோரும் பயந்தது கொண்டு அமைதியாக உட்கார்ந்தது இருந்தோம் ,எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக மாலதி என்ற ஆசிரியை இருந்த்தார்கள்,நல்ல சிவப்பாக பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள் ,தவறாக எடுத்துக்கொள்ளதிர்கள் ,அந்த வயதில் அழகு மட்டும் தான் தெரியும் . மாவட்டகல்வி அதிகாரி அவர்கள் வந்ததார்கள் ,ஏதேதோ கேட்டார்கள் பிறகு போகிவிட்டர்கள் ,ஆனால் பிறகு அடிக்கடி வர ஆரம்பித்தார்கள் ,எங்களுக்கு பயம் ஆனால் எங்களை ஒன்றும் கேட்பதில்லை ,மாலதி ஆசிரியையிடம் மட்டும் பேசிக்கொண்டிருப்பார்கள் ,பிறகு போகிவிடுவார்கள் இது பிறகு தினமும் நடக்க ஆரம்பித்தது ,பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குள் ஒரே கசமுசா என புகைய ஆரம்பித்தது ,நாங்கள் பள்ளிகல்வியை முடித்து விட்டு மேல்நிலை கல்விக்கு வந்துவிட்டோம் பிறகு என்ன நடந்ததது என்றே தெரியவில்லை ,இருந்ததாலும் அவர்கள் செயல் அந்த வயதில் என் மனதில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தியது .சமிபத்தில் பல்கலை கழகத்திற்கு வந்த மாவட்டகல்வி அதிகாரி என்னை பார்த்து ஒரு உதவி கேட்டார்கள் ,அப்போது தான் கூறினார் அவரும் மாலதி ஆசிரியையும் திருமணம் செய்துகொண்டதாக !இந்த விஷயம் சரியா தவறா தெரிய வில்லை ஆனால் என் மனதில் நீங்காத நினைவுகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது விட்டது .

சாதிஎன்றால் என்ன ?அது தேவையா ??

சாதிஎன்றால் என்ன ?அது தேவையா ??
இந்தியாவில் சாதி என்ற ஒரு கொடுமையான பிரிவு ,நினைக்கும் போதே நெஞ்சம் கொதிக்கும் .நல்ல நோக்கத்திற்காக செய்யும் தொழிலுக்கு ஏற்ப பிரித்த பிரிவுகள் பல்கி பெருகி பல ஆயிரம் சாதிகளாக உருமாறி இருக்கும் அவலம் தான் என்ன ? அக்காலத்தில் அறிவால் சிறந்த்தவர்களை பாணர்கள் [அந்தணர்கள் ],வியாபாரத்தில் சிறந்த்தவர்களை வைசியர்கள் [வணிகர்கள்]வீரத்தில் சிறந்த படை வீரர்களை சத்திரியர்கள் ,உடலால் உழைப்பவர்களை சூத்திரர்கள் என பிரித்து வைத்திருந்தார்கள் .அவைகள் கூட நல்ல தமிழ் பெயர்களாக பாணர்கள் ,படையாளுனர்கள் ,பெரும் வணிகத்தார் ,தோளர்கள் எனவே அழைக்கப்பட்டது ,இவர்களில் பலர் பல காலங்களில் தொடர்ந்தது ஒரே வேலையை பரம்பரை பரம்பரையாக செய்து வந்ததார்கள் ,அரசர்கள் அருகில் இருந்தவர்கள் செல்வந்தர்களாகவும் ,மற்றவர்கள் பொருளாதரத்தில் பின்தங்கியும் ,அறிவிலேயும் பின்தங்கி விட்டார்கள் .காலத்தின் கோலத்தால் சில உயர் பிரிவினர்களால் மிகவும் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் அடிமை படுத்தப்பட்டு எழ முடியாத வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டது ,"சிந்தியுங்கள்" சில சாதிகளை பாருங்கள் பள்ளம் தோண்டி மண் வேலை செய்பவர்கள் பள்ளர்கள் ,பறையை அடித்தவர்கள் பறையர்கள் ,படையை ஆண்டவர்கள் படையாட்சிகள்
சாதி உருவான வரலாறு புரியும் !!
இப்படி அனைத்து சாதிகளும் தொழிலை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது ."சிந்தியுங்கள் "இப்போது தொழில்கள் எல்லாம் மாறிவிட்ட பிறகு எல்லோரும் எல்லா தொழிலும் செய்யும் பொது இந்த சாதி தேவையா ? இவைகளுக்கு அரசு அங்கிகாரம் தேவையா ?முதல்வன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் சாதியை ஒழிக்க ஒருவழி சொல்வார்கள் .பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு கல்வி, பொருளாதாரத்திலேயும் அவர்கள் உயரும் வரை இட ஒதுக்கிடு தேவைதான் !இட ஒதுக்கீடு , சலுகைகள் அளிப்பதன் அடிப்படையில் மெல்ல மெல்ல அந்த சமுதாயங்கள் மற்றவர்களோடு தற்போது அறிவிலும் ,பொருளாதார ரீதியாகவும் போட்டியீட தொடங்கி இருக்கிறது ,
ஆனால் அவைகளுக்கு சாதி அடையாளங்கள் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் "அ" பிரிவு என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் "ஆ" பிரிவு என்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் "இ "பிரிவு என்றும் மற்றவர்களை" ஈ "பிரிவு என்றும் நான்கு பிரிவுகளை மட்டும் உருவாக்கி அரசு ஆவணங்களில் எந்த சாதி பிரிவுகளுக்கும் அடையலாம் இல்லாமல் முதலிலே செயல் படுத்த வேண்டும் .இதனால் உபசாதிகள் முதலில் ஒழியும் ,
மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவன் ,தான் முனேறிய வகுப்பை சார்ந்தவன் என்று கூறினால் அவன் தாழ்த்தப்பட்டவன் தான் என நிருபிக்கின்ற எந்தவித அரசு ஆவணங்களும் ஆதாரமாக இருக்க கூடாது .கலப்பு திருமணங்கள் அவர்கள் என்ன சாதி என அறியப்படாமலே நடப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்." அ "பிரிவை சார்ந்தவர்கள் கல்வி ,மற்றும் பொருளாதாரத்திலேயும் குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டால் "ஆ" பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் ,இதே போல் படிப்படியாக எல்லோரும்" ஈ "பிரிவுக்கு உயர்த்தப்பட்டு அனைத்து பிரிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும் ,
முதலில் ஊர் ஒதுக்கு புறத்தில் இருக்கும் சேரியை ஒழித்து ஊரோடு இணைக்க வேண்டும் ,அப்போது தான் சாதிகள் படிப்படியாக ஒழியும் !!
இதில் சாதி உருவான விதம் பற்றியும் ,அதை ஒழிப்பதற்கான வழிகளை பற்றியும் என் அறிவுக்கு எட்டியதை பதிவு செய்திருக்கின்றேன் ,உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்